பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


மறுபடியும் அந்த இருண்ட மூலைக்கு வந்தான். தன்னிடமி ருந்த வலம்புரிச் சங்கை மார்போடு சேர்த்துத் தழுவினாற்போல் வைத்துக்கொண்டு சாய்ந்து படுத்தான். அந்தக் கப்பலில் யாரோ ஏளனமாகச் சிரித்துக்கொண்டே பேசிய சில வார்த்தைகளை அவன் செவிகள் கேட்டன.

‘மறுபடியும் தென்பாண்டி நாடு போரில் தோற்றுவிட்டதாம் ஐயா! தளபதியே பாண்டியப் பேரரசுக்கு எதிராக மாறிவிட்டானாம். எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் இறந்து விட்டாராம். மகாராணி வஞ்சிமா நகரத்துக்குத் தப்பிப் போய்விட்டாராம். அந்தப் பயந்தாங்கொள்ளி இளவரசன் இராசசிம்மன் எங்கோ போய்விட்டானாம்.”

“தெரிந்த விஷயம்தானே ஐயா! யார் தோற்றாலென்ன? யார் வென்றாலென்ன? நம்முடைய கப்பல் விழிஞத்துக்கு வந்து போவது நிற்கப் போவதில்லை. பேச்சை விடுங்கள்!” என்று மீகாமன் அலட்சியமாகப் பதிலளித்ததையும் இருளில் முடங்கிப்படுத்திருந்த குமாரபாண்டியன் கேட்டான். அந்தச் சொற்கள் சுளிர்சுளிரென்று தன் நெஞ்சில் அறைவது போலிருந்தது அவனுக்கு தென்பாண்டி நாடு, வெற்றி, தோல்வி, போர், இளவரசப்பட்டம், மரபு எல்லாவற்றையும் பழங் கனவுகள் போல் மறந்துவிடத் துடித்தது அவன் உள்ளம்.

‘மறக்கத்தான் போகிறேன்! நாளைக்குச் செம்பவழத் தீவில் இறங்கி அந்த வெண்முத்துப் பற்களின் சிரிப்பைப் பார்த்தபின் எல்லாவற்றையும் மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத்தான் போகிறேன்!” என்று வற்புறுத்தி நினைத்துக் கொண்டு மனச்சாந்தி பெற்று உறங்கினான் அவன். உறக்கமென்றால் தானாக உண்டாக்கிக் கொண்ட உறக்கம்தான் அது. அந்தப் போலி உறக்கத்திலும் நினைவுகளின் மூட்டத்திலுமாகக் கப்பலின் இரவுப் பயணத்தைக் கழித்து விட்டான் குமாரபாண்டியன். விடித்ததும், “ஐயா! எழுந்திரு! இதோ செம்பவழத் தீவு வந்துவிட்டது” என்று மீகாமன் வந்து எழுப்பினான். கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீகாமனும் மற்றவர்களும் தன் முகத்தைப் பார்த்துவிடாமல் மேலாடையால் தலையைப் போர்த்தியதுபோல்