பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்

விசாலமான தவப்பள்ளியில் இன்னும் நிறைய இடம் இருக்கிறது. உங்களையும் உங்களைப்போல வர இருக்கும் இன்னும் எத்தனையோ பேரையும் இந்தத் திருக்குண வாயிலின் கதவுகள் எப்போதும் திறந்தவண்ணம் வரவேற்கக் காத்திருக்கின்றன’ என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பாராமல் மறுபடியும் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் மகாராணி.

வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அந்தத் தவக்கோலத்தை வணங்கிவிட்டு அந்தக் குணவாயிற் கோட்டத்தின் உள்ளே சென்றனர். சில நாழிகைகளுக்குப்பின் அவர்களும் தவக்கோலத்தோடு வந்து அமர்ந்தபோது தியானத்தில் ஆழ்ந்திருந்த மகாராணி கண்திறந்து பார்த்தார். அவர் வதனத்தில் அருள் நகை மலர்ந்தது. ஒரு கணம்தான்! மறுபடியும் அவர் விழிகள் மூடிக்கொண்டன. அப்போது அந்தப் பக்கமாகக் குணவாயிற் கோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த வஞ்சிமா நகரத்துப் பொதுமக்கள் சிலர் கீழ்க்கண்டவாறு தங்களுக்குள் உரையாடிக்கொண்டு சென்றது அவர் செவியிலும் விழுந்தது.

“அதோ பத்மப்பளிங்கு மேடையில் அருளொளி திகழ வீற்றிருக்கும் அந்தத் தவ மூதாட்டி யார் தெரியுமா?


“அவர் சேரநாட்டு மன்னன் மகளாய்ப் பிறந்து பாண்டி நாட்டு மாமன்னன் பராந்தகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பாண்டிமாதேவியாகப் பெருவாழ்வு வாழ்ந்தவர். இப்போது தவவாழ்வு வாழ்கிறார் இங்கே!”

இந்த உரையாடலைச் செவியுற்றபோது துன்பம் நிறைந்த முன் பிறவி ஒன்றை யாரோ நினைவுபடுத்தினாற் போலிருந்தது அவருக்கு அவர் சிரித்துக்கொண்டார்.

“உலகம் உயிர்ப்பூக்களின் நந்தவனம்! அங்கே துன்பங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காததுபோல் நடுவாக நடந்து போய்விடவேண்டும்” என்று தியானத்துக்கு நடுவே நினைத்துக் கொண்டு மெய்யுணர்வில் மூழ்கினார் அவர். காலம் சுழன்று வளர்ந்து பெருகிக் கனத்து நீண்டு கொண்டே இருந்தது.

(முற்றிற்று)