பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பிரமிப்பூட்டிக் கொண்டிருந்தார், மகாமண்டலேசுவரர். அடுத்துத் தமிழ்நாட்டுத் தாய்மைப் பண்பின் புனித வடிவமாய்ச் சாந்த குணமே இயல்பாய் வானவன்மாதேவி வருகிறார். நிறைவு பெறாத சபலங்களையும், முயற்சிகளையும் கொண்டு வாழவும், ஆளவும், போராடுகிற குமாரபாண்டியன் இராசசிம்மன் வருகிறான். மற்றும் தளபதி வல்லாளதேவன், நாராயணன் சேந்தன், பகவதி, மதிவதனி, விலாசினி சக்க சேனாபதி போன்றோரும் இந்தக் கதையில் வருகின்றனர்.

தொல் காப்பியம் அரங்கேறுகிற காலத்திருந்த அதங்கோட்டாசிரியரின் வழி முறையினராகக் கருதப்பெறும் பிற்காலத்து அதங்கோட்டா சிரியர் ஒருவரும், பவழக்கனிவாயர் என்பவரும், கதை நிகழ்ந்த காலத்துப் பெரியோர்களாக வருகின்றனர்.

இந்த வரலாற்றுப் பெருங்கதையில் யான் பல ஆண்டுகளாகப் படித்த தமிழ் இலக்கியக் கருத்துக்களையும், ஆழமான தத்துவங்களையும் அங்கங்கே இணைத்திருக்கிறேன். தமிழ் நாட்டின் பழைய வாழ்க்கை மரபுகளையும், ஒழுகலாறுகளையும் கவனமாகவும், பொருத்தமாகவும் கையாண்டிருக்கிறேன். ஆனால், கதையின் சுவையும், விறுவிறுப்பும் கெடாதவாறு பாலில் குங்குமப்பூ போல அவற்றைக் கரையச் செய்திருக்கிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் எளியேனுடைய இந்தக் கதையை ஆர்வத்தோடு படித்து நேரில் கூப்பிட்டும் ஆசியுரை அருளினார்கள். மறக்க முடியாத பாக்கியம், பெரியவர்களின் இந்த ஆசியுரைதான். இதை எக்காலத்தும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டியவன் நான்.

இறுதியாக இப்படி ஒரு கதையை எழுதும் திடத்தையும் ஆற்றலையும் அளித்து என்னை யாண்டருளிய இறைவனுக்கு வணக்கம் தெரிவித்து என் முன்னுரையைத் தெய்வத் தியானத்தோடு முடிக்கிறேன்.

மதுரை
அன்பன்
18.9.60
நா. பார்த்தசாரதி