பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

79


இருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது! அதை எனக்குச் சொல்லலாம் அல்லவா? தெரிந்துகொள்ள ஆவலாயிருக் கிறேன்” என்றார் மகாமண்டலேசுவரர். தன் மனத்தில் யாருக்கும் வெளிப்படுத்திச் சொல்ல இயலாத அந்தரங்கமான இடத்தில் மறைந்திருந்த ஒர் உண்மையை அவருடைய கேள்விக்குப் பதிலாகச் சொல்ல வேண்டியிருந்ததால் தளபதி வல்லாளதேவன் தயங்கினான்.

ஒருவேளை நாராயணன் சேந்தன் அருகில் இருப்பதால் தான் தளபதி சொல்லத் தயங்குகிறானோ என்று நினைத்தார் மகாமண்டலேசுவரர்.

“சேந்தா! ஆற்று நீரிலும் சேற்றிலும் சகதியிலும் புரண்டுவிட்டு ஈர உடையோடு நின்று கொண்டிருக்கிறாயே. போய் உடை மாற்றிக்கொண்டு வா,” என்று சொல்லி நாராயணன் சேந்தனை அங்கிருந்து அவர் அனுப்பி வைத்தார்.

ஆனால் அதன் பின்பும் தளபதி வாய் திறக்கவில்லை. “வல்லாளதேவா! உன் மனத்தில் இருப்பதை நீ என்னிடம் சொல்லத் தயங்குகிறாய்; பரவாயில்லை. நீ சொல்லவே வேண்டாம். பல நூறு காதத் தொலைவிலிருக்கும் வடதிசை மும் மன்னரும் இந்தக் கணத்தில் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக்கூட என்னால் இங்கிருந்தே சொல்லிவிட முடியும். நீ நினைப்பதைத் தெரிந்து கொள்வது பெரிய காரியமில்லை. இதோ சொல்கிறேன் கேள்; இந்த ஒலையைப் படித்ததும் உன் மனத்தில் என்ன தோன்றியது, தெரியுமா ? ‘மகாமண்டலேசுவரரே வடதிசை மூவேந்தர்களுக்கு உள்கையாக இருப்பார் போலிருக்கிறது. இல்லையானால் இந்த ஒலை அவர் பெயருக்கு எழுதப்படுமா? ஆகா! இது எவ்வளவு அநியாயம்! வானவன் மாதேவியைக் கொலை செய்வதற்கு ஒற்றர்களை அனுப்புமாறு இவரே வடதிசைப் பேரரசருக்குத் தெரிவித்திருக்க வேண்டும். திருப்புறம்பியத்தில் அவர்களை வந்து சந்திப்பதாக இவரே சொல்லியிருப்பார். மகாமண்டலேசுவரரே இப்படிச் சதி