பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பாண்டிமாதேவி / முதல் பாகம்


இராசசிம்மனைத் தேடிக் கொண்டுவந்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அவள் முயன்று விடுவாளோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. அடையாற்று மங்கலம் நம்பியும் தென்புறத்தாய நாட்டுப் பெரும் படையும் வானவன் மாதேவியோடு ஒத்துழைத்து அப்படிச் செய்ய முற்படுவதற்குள் சில சதித் திட்டங்களின் மூலம் தங்களுடைய ஆசையை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டனர் வடதிசை மும்மன்னர்கள். அதற்காகச் சோழன் கோப்பரகேசரி பராந்தகனும் கொடும்பாளுர் மன்னனும் அரசூருடையானும் உறையூர்க் கோட்டையில் ஓர் இரகசிய மந்திராலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். வடதிசை மும்மன்னர்களும் தங்களுடைய முக்கியமான இராஜாங்க அதிகாரிகளோடு உறையூருக்கு வந்திருந்தனர்.

சோழன் கோப்பரகேசரி பராந்தகனின் உறையூர் அரண்மனை மந்திராலோசனை சபையில் கூட்டம் பரம இரகசியமாகக் கூடியது. அழகும், இளமையும், வீரமும், ஒன்றேடொன்று போட்டி போட்டுக் கொண்டு ஒன்று பட்ட உருவம் போல் சோழனும், பிடரிமயிரோடு கூடிய சிங்கத்தைப் போன்ற, கம்பீரமான தோற்றத்தையுடைய அரசூருடையானும், காண்பவர்களைப் பயமுறுத்தும் வளமான அடர்ந்த மீசையும், நெருப்பு வட்டங்களைப் போல் சுழலும் கண்களும் யானை போல் பருத்த தோற்றத்தையுமுடைய கொடும்பாளுர் மன்னனும் அருகருகே மூன்று சிம்மாசனங்களில் வீற்றிருந்தனர். திருமந்திர ஓலைநாயகர்களும் அமைச்சர் பிரதானிகளும் சுற்றிலும் இடப்பட்டிருந்த மற்ற ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

“இந்த மந்திரலோசனைக் கூட்டம் வடபால் நாட்டுப் பெரு மன்னர்களாகிய நமக்குள் ஒர் அவசியமான தீர்மானத்தை ஏற்படுத்தி முடிவு செய்து கொள்வதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. நாம் மூவரும், நம்முடைய படைகளுமாகச் சேர்ந்து சமீபத்தில் பாண்டி நாட்டின்