பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பாண்டிமாதேவி / முதல் பாகம்


இப்படிக் கூறியவன் கொடும்பாளுர் மன்னன். அப்பப்பா ! அவன் தோற்றத்தைபோலவே குரலும் கடுமையாகத்தான் இருக்கிறது. இடி முழக்கத்தைப் போல, கையைத் தூக்கி ஆட்டி உணர்ச்சிகரமாகப் பேசினான் அவன். அந்தச் சுருக்கமான பேச்சிலும், முக பாவத்திலுமே, இவன் அதிகம் பேசுவதை விரும்பாத காரியப் புலி’ என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

“முன்பு செய்தது போலவே நாம் மூவரும் ஒன்று சேர்ந்து நாஞ்சில் நாட்டின் மேல் படையெடுத்து விடலாம்” என்றான் அரசூருடையான்.

மற்ற இருவரும் அதற்கு இணங்கவில்லை. “இப்போது தான் ஒரு பெரிய போரில் ஈடுபட்டு அலுத்துப்போன படைகளை மறுபடியும் உடனடியாகத் துன்புறுத்த முடியாது. போரைத் தவிர வேறு தந்திரமான வழிகள் எவையேனும் இருந்தால் பார்க்கலாம்’ என்று கோப்பரகேசரியும் கொடும்பாளூரானும் ஒருமுகமாக மறுத்துவிட்டனர். அங்கிருந்த மூவரசரின் அமைச்சர்கள் பிரதானிகளும் போர் யோசனையை அவ்வளவாக வரவேற்கவில்லை.

“நான் ஒரு வழி சொல்லுகிறேன். ஆனால் அது கடுமையான வழி. பயங்கரமும் இரகசியமுமாக இருக்க வேண்டியதும் ஆகும் அது!” என்று சொல்லியவாறே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து மேலே சொல்வதற்குத் தயங்கினான் கொடும்பாளூர் மன்னன். அவனுடைய தயக்கம் நிறைந்த அந்தப் பார்வையின் அர்த்தத்தை அரசூருடையானும் சோழ கேசரியும் புரிந்து கொண்டு விட்டனர்.

உடனே சோழன் கோப்பரகேசரி அங்கிருந்த மற்றவர்களுக்குச் சைகை செய்தான். அவர்கள் மெளனமாக எழுந்து மந்திராலோசனை மண்டபத்துக்கு வெளியே சென்றார்கள். மண்டபத்துக்குள் அரசர்கள் மூவரும் தனியே விடப்பட்டனர். பரகேசரியும் அரசூருடையானும் கொடும்பாளூர் மன்னனின் பக்கத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்தனர்.