பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பாண்டிமாதேவி / முதல் பாகம்


கழுத்துக்கு நேரே, ஆறு முரட்டுக் கைகள் ஒரு கூர்மையான வேலை எறிவதற்குக் குறி வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. உருவத்தின் கீழே வானவன்மாதேவியார் என்றும் எழுதியிருந்தது. இரண்டாவது ஒலையில் கடலின் மேல் ஒரு பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வதுபோல் வரைந்திருந்தது. அதன் அருகில் குமார பாண்டியன் இராசசிம்மனைப் போல் ஓர் இளைஞனின் உருவம் சித்திரிக்கப்பட்டு, முதல் ஓலையில் கண்டபடியே கப்பலிலிருந்து ஆறு கைகள் நீண்டு ஒரு வேலை அந்த இளைஞனின் நெஞ்சில் பாய்ச்சுவதற்குத் தயாராக இருப்பதுபோல் வரையப்பட்டு உருவின் கீழே பாண்டிய குமாரன் இராசசிம்மன் என்று எழுதியிருந்தது.

எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத மனக் குழப்பத்தோடு மூன்றாவது ஒலையைக் கையிலெடுத்துப் பார்த்தனர் அரசூருடையானும், கோப்பரகேசரியும். அந்த மூன்றாவது ஒலையில் அவர்களுடைய இதயத்தைக் குழப்பும் மூன்றாவது புதிர் மறைந்திருந்தது. அதையும் பார்த்துத் திகைத்து விட்டனர் இருவரும்.

மூன்றாவது ஒலையில் இரண்டு ஆறுகளுக்கு இடையே ஒரு சிறிய தீவு போலவும், அதில் ஒரு மாளிகை போலவும் வரைந்திருந்தன; மாளிகை வாசலில் இடையாற்று மங்கலம் நம்பி என்று பெயர் எழுதப்பட்ட ஒர் உருவமும் வரையப்பட்டிந்தது. இந்தப் படத்திலும் ஆறு கைகள் இருந்தன. ஆனால் முன் ஒலைகள் இரண்டுக்கும் இந்த ஒலைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இருந்தது.

மூன்று ஒலைகளிலும் கொடும்பாளுர்க் குறுநில மன்னன் அவசரம் அவசரமாகக் கிறுக்கியிருந்த சித்திரங்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு அரசூருடையானும், பரகேசரியும் தலைநிமிர்ந்தனர். எதையும் விளக்கமாகப் புரிந்து கொண்டாற்போன்ற தெளிவு அவர்கள் முகத்தில் துலங்கவே இல்லை.