பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

95


உறையூரில் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த மறுதினம் மாலை நாகைப்பட்டினத்துக் கடல் துறையில் ஒரு காட்சியைக் காண்கிறோம். கரையில் ஒரு பெரிய பாய்மரக் கப்பல் ஈழ நாட்டுக்குப் புறப்படுவதற்குத் தயாராக நிற்கிறது. பாய்மரத்தின் கூம்பில் கப்பலுக்கே அழகு செய்வது போலப் புலி, பனை ஆகிய சின்னங்கள் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

கரையில் கொடியிலே கண்ட அந்தச் சின்னங்களுக்குரிய மாபெரும் வேந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், ஆம்! நாம் உறையூர் அரண்மனையில் சந்தித்த அந்த மூவரும்தான். அவர்களுக்கு எதிரே சிவப்புத் தலைப்பாகை அணிந்த ஆறு வீரர்கள் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். கொடும்பாளுர் மன்னன் அந்த வீரர்களிடம் உபதேசம் செய்வது போலக் கைகளை ஆட்டியும், கண்களைச் சுழற்றிப் புருவத்தை வளைத்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அப்படி என்னதான் முக்கியமான செய்தியை அவர்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றான் ? அருகில் நெருங்கிச் சென்று நாமும்தான் அந்தச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்வோமா!

“அடே! நீங்கள் மூவரும் பரம ஜாக்கிரதையாக இந்தக் காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பி வரவேண்டும், முத்தரையா! இரும்பொறை, செம்பியர் - நீங்கள் ஏறிச் செல்லுகிற இந்தப் பாய்மரக் கப்பல் நேராக மேல் கடற்கோடியிலுள்ள விழிளும் துறைமுகத்தில் கொண்டுபோய் உங்கள் மூவரையும் இறக்கிவிட்டு விட்டு அப்புறம்தான் ஈழத்துக்குப் போகும். உங்களோடு வருகின்ற மற்ற மூவரும் கப்பலோடு அப்படியே ஈழ நாட்டுக்குச் சென்றுவிடுவார்கள். உங்களைப் போலவுே அவர்கள் ஈழத்தில் போய் ஒரு செயலை முடித்துக்கொண்டு வெற்றிகரமாகத் திரும்பவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் உங்கள் செயலை முடிப்பதற்குமுன் நான் கொடுத்த ஒலையை இடையாற்று மங்கலம் நம்பியிடம் சேர்த்துவிடக்கூடாது!” என்று எச்சரித்தான் கொடும்பாளூர் மன்னன்.