பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அந்த வீரர்கள் அவன் கூறியவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு மரியாதை செலுத்துகிற பாவனையில் தலை வணங்கினர்.

அப்போது அந்தப் பாய்மரக் கப்பலைச் செலுத்தும் மாலுமி வந்து கும்பிட்டான். “பிரபூ! கடலில் காற்று அதிகமாக இருக்கும்போதே புறப்பட வேண்டும். இல்லையானால் எத்தனை பாய்களை விரித்தாலும் பயனில்லை. நேரமாகிறது, இவர்களை ஏற்றிக்கொண்டு புறப்படுகிறேன். எங்களுக்கு விடை கொடுங்கள்” என்று கொடும்பாளூர் மன்னரிடம் பணிவான குரலில் அவன் வேண்டிக் கொண்டான்.

சற்றுத் தள்ளித் தங்களுக்குள் ஏதோ பேசியவாறு நின்று கொண்டிருந்த அரசூருடையானும், சோழன் பரகேசரியும் நெருங்கி வந்தனர்.

கிங்கரர்களைப் போலத் தோற்றமளித்த அந்த ஆறு வீரர்களும் பாய்மரக் கப்பலின் முதல் தளத்தில் ஏறி நின்று கொண்டனர். கரையில் நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருந்த அரசர்கள் மூவரையும் கடைசி முறையாக வணங்கினர்.

அதே சமயத்தில் தேர்வடம் போல் இழுத்துக் கட்டியிருந்த நங்கூரக்கயிறு அவிழ்க்கப்பட்டது. சிகரத்தில் அசைந்தாடும் கொடியுடனே மிகவும் பெரிய வெண்ணிறப் பறவை ஒன்று தண்ணிர்ப் பரப்பை ஒட்டினாற் போலச் சிறகுகளை அடித்துக்கொண்டு பறப்பது போல் கப்பல் கடலுக்குள் நகர்ந்தது.

“நண்பர்களே! இன்னும் பதினைந்தே தினங்கள்தான். நம்முடைய மனோரதம் நிறைவேறிவிடும்!” என்று கொடும்பாளுர் மன்னன் அரசூருடை யானையும் பரகேசரியையும் பார்த்துக் கூறினான்.