பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளி பறந்தது

7


“இப்போதுதான் அரசு கட்டில் ஏறினான். விளையாட்டை விட்டு அரசியலில் புகுந்தான். அதற்குள் போர் என்றால் அவன் உள்ளம் அஞ்சாதா?” என்று கேட்டார் மற்றோர் அமைச்சர்.

“நம் அரசனுடைய அறிவைக் காணக் கான நமக்கு வியப்பு உண்டாகிறது; அதுபோலவே அவனுடைய வீரமும் நமக்கு வியப்பை உண்டாக்கலாம். எப்படியும் நாம் படைகளைப் போருக்கு ஆயத்தப்படுத்த வேண்டியதுதான். இந்தச் செய்தியை அரசனிடம் கூறி, மேற்கொண்டு செய்யவேண்டுவதைச் செய்வதே நம் கடமை” என்றார் முதல் அமைச்சர்.

அவர்களுடைய கவலைக்குக் காரணம் பாண்டி நாட்டைக் கைப்பற்றச் சேர அரசன் முயல்கிறான் என்ற செய்திதான். ஒற்றர்களின் வாயிலாக இது அமைச்சர்களுக்குத் தெரிய வந்தது.

பாண்டி நாட்டில் எல்லா வளங்களும் உண்டு. ஐந்து வகையான நிலங்களும் இருக்கின்றன. பல காலமாகப் பெரு மன்னர்களின் பாதுகாப்பில் இருந்தமையால் நாளுக்கு நாள் வளம் பெருகி வந்தது. பிற நாட்டரசர்கள் பாண்டியனோடு போர் செய்ய அஞ்சினார்கள். பாண்டி நாட்டைப் போலத் தம் நாட்டில் வளம் சுரக்க வேண்டும் என்றும், பாண்டியனைப் போலத் தாமும் புகழ் பெறவேண்டும் என்றும் அவர்கள் ஆசைப்பட்டார்கள். வெறும் ஆசை இருந்தால் போதுமா? அதற்கு ஏற்ற ஆற்றல் வேண்டாமா?

அக்காலத்தில் சேர நாட்டில் அரசனாக இருந்தவன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை