பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
கிளி பறந்தது


“அதற்காக நாம் என்ன செய்வது? பாண்டி நாட்டுக்கு வந்த கவலையை நாம் ஏற்றுக்கொண்டு வருந்துவானேன்?” என்று கேட்டான் சேர மன்னன்.

“கவலைப்பட வேண்டாம். வேறு ஓர் அரசன் கொண்டு போகிறதை நாமே எடுத்துக்கொள்ளலாமே!”

“பாண்டிய நாட்டைக் கைப்பற்றலாம் என்று சொல்கிறீரா?”

“மன்னர் பிரானுக்கு நாடு விரிவடைய வேண்டும் என்று விருப்பம் இல்லாவிட்டால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம்.”

“இல்லை, இல்லை. உம்முடைய யோசனை என்ன? அதைத் தெளிவாகச் சொல்லும்.”

“நமக்கு வேண்டிய படைகள் இருக்கின்றன. பல காலம் போர் செய்யாமல் வீரர்கள் தோள் தினவெடுத்துக் கிடக்கிறார்கள். பாண்டி நாட்டு அரசனோ குழந்தை. இப்போது நாம் மதுரையை முற்றுகையிட்டால் எளிதில் கைப்பற்றலாம். இத்தகைய சந்தர்ப்பம் என்றும் இருந்ததில்லை. இனியும் நேராது.”

அரசனுக்கு மண்ணாசை தோன்றியது; அது வளர்ந்து பெரிய உருவம் எடுத்தது. யானையின் கண்ணைப் போன்ற சிறிய கண்ணை உடையவனாதலால் யானைக்கட் சேய் என்று அவனை வழங்கினார்கள். அவன் புறக்கண் சிறியதாக இருந்ததைப் போல அகக் கண்ணும் சிறியதாகிவிட்டது போலும்! அமைச்சன் கூறியதை நம்பி ஆசையை வளர்த்தானேயன்றித் தானே ஆய்ந்து பார்க்கவில்லை.