பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
பாண்டியன் நெடுஞ்செழியன்

டுக்குள் கிளியை அடைத்துக் கொஞ்சுவதுபோல அவனுக்குத் தோன்றியது. அவன் எண்ணமெல்லாம் எப்படி அந்தச் சிறையினின்றும் விடுபட்டுச் செல்வது என்பதில் கவிந்திருந்தன.

கட்டுக் காவல் கடுமையாக இல்லை. பாண்டிய அரசனுடைய பெருந்தன்மையை அவன் தன் உள்ளத்துக்குள் பாராட்டினான். அவ் விளைய அரசன் அப்போது என்ன வேண்டுமானலும் செய்யலாமே! இது சிறையா? தன் நிலைக்குச் சிறையே ஒழிய வசதிகளில் ஏதேனும் குறைவுண்டா?-இந்த எண்ணங்கள் அவனுக்குத் தோன்றினாலும் அவை அவனுக்கு உரிமை வாழ்வில் உண்டான ஆசையை மாற்றவில்லை. எப்படியாவது அங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும் என்று உறுதி கொண்டான். ஒருவருக்கும் தெரியாமல் காவலாளர் சோர்ந்திருக்கும் செவ்வி அறிந்து ஓடி விட வேண்டுமென்று திட்டமிட்டான். தன் வீரத்துக்கு அடுக்காத செயல்தான். ஆயினும் வேறு வழி இல்லையே!

அவன் எண்ணம் கைகூடியது. பாண்டிய அரசனுக்கும் இவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இதற்குள் அவன் தன் பிழையை எண்ணி வருந்துவான் என்று நினைத்தான். ஆதலால் அவனுக்கு எந்த விதமான தீங்கும் நடவாமல் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். விருந்தினனைப்போல உபசாரம் செய்ய வேண்டுமென்று பணித்தான். இந்த நிலையில் கடுமையான காவல் எவ்வாறு இருக்கும்?