பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பாண்டியன் நெடுஞ்செழியன்

வெல்லலாம். சேரன் முன்பே பாண்டியனிடம் தோல்வியுற்றவன். அவன் தனியே இனிப் போர்க்குச் செல்லமாட்டான். ஆயினும் அவன் உள்ளத்தில் பகைக் கனல் அவிந்திராது; கொழுந்து விட்டெரிந்து கொண்டேயிருக்கும். அவனைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். போதுமா? இன்னும் பலரைத் துணைவராகச் சேர்த்துக்கொள்ள விரும்பினான்.

“பாண்டியனை வெற்றி கொள்ள யார் யார் வருகிறீர்கள்?” என்று வெளிப்படையாக முரசறைந்து விளம்பரப் படுத்தவில்லையே ஒழிய ஊருக்கு ஊர் ஆள் அனுப்பித் தன் கருத்தைத் தெரியப்படுத்தி அவர்களுடைய கருத்தை அறிந்துவரச் செய்தான்.

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் முடியுடை மன்னர்கள் மூவர் இருந்தார்கள். தொன்று தொட்டு வரும் அரச குலத்தைச் சார்ந்த சேர சோழ பாண்டியர்களாகிய மூவரையும் சிறப்பித்துப் பாராட்டுவது வழக்கு. அவர்களையல்லாமல் அங்கங்கே உள்ள கொங்கு நாடு முதலிய நாடுகளை ஆண்ட சிற்றரசர்களும் இருந்தார்கள்.

இந்த இரு வகையினர்களை யல்லாமல் வேளிர் என்று வழங்கும் தலைவர்கள் பலர் பல இடங்களில் இருந்தார்கள். அவர்கள் தம்முடைய ஊர்களில் உள்ள மக்களையும் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களையும் ஆண்டு வந்தார்கள்; இக்காலத்தில் ஜமீன்தார்கள் என்றும் பாளையக்காரர்கள் என்றும் வழங்குபவர்களைப் போன்ற நிலை படைத்தவர்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் அடங்கியவர்கள் அல்லர். நிலவளமுடைய வேளாண்குடியிலே பிறந்தவர்கள் அவர்கள்