பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19
வஞ்சினம் வெடித்தது

வேளிர்களுக்குள் ஒழுக்கத்தாலும் கொடையாலும் சான்றாண்மையாலும் சிறந்தவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் தமக்குள்ளே சண்டையிட்டார்கள். பெரு மன்னர்களுக்குள் போர் நிகழ்ந்தால் அவர்களுக்குத் துணையாகச் சென்று போரில் ஈடுபடுவதும் உண்டு. போர் வீரர்களையும் யானை முதலிய படைகளையும் அவர்கள் வைத்துத் தம் ஆட்சிக்குட்பட்ட ஊர்களைப் பாதுகாதது வந்தார்கள்.

சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் உள்ள வேளிரையும் குறுநில மன்னரையும் சேரனையும் தனக்குப் படைத் துணையாகச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியைச் சோழன் மிக வேகமாகச் செய்து வந்தான். எத்தனை பேர் சேர்ந்து போரிட்டாலும் வெற்றியிலே பங்கு கொடுக்கலாம். பாண்டி நாடு எவ்வளவு விரிந்தது! இருபது பேர்கள் போரிட்டு வெற்றி பெற்றால் அந்த இருபது பேர்களுமே அந்த நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளலாம். அந்த நாட்டிலே எந்தப் பொருள் இல்லை?

சோழன் முயற்சி பலிக்கும் என்றே தோன்றியது. முதலில் அவன் சேரனுடைய உடன்பாட்டைப் பெற்றான். “போர் பாண்டி நாட்டு எல்லைக்கு வெளியே நடந்தால் நான் அவசியம் படையுடன் வந்து சேர்ந்து போரிடுகிறேன்!” என்று சேரன் உறுதி கூறினான். ஒருமுறை பாண்டி நாட்டின் எல்லைக்குள்ளே புகுந்து அகப்பட்டுக் கொண்டவன் அல்லவா?

சோழ நாட்டில் அழுந்தூர் என்ற ஊரில் திதியன் என்னும் வேள் ஒருவன் இருந்தான். அவன் வீரத்திற் சிறந்தவன். குறுக்கை யென்னும் இடத்தில்