பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பாண்டியன் நெடுஞ்செழியன்


“ஆம், ஆம்; அப்படித்தான் அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்” என்று அரசவையில் சிலர் தமக்குள் கூறிக்கொண்டனர்.

“அவர்கள் உண்மையை அறியாதவர்கள். பாண்டி நாட்டின் சிறப்பை உணராதவர்கள். இந்த மண்ணின் வீரத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள். என் இளமையையும் சிறிய உருவையும் பார்த்து ஏமாந்து போய் விட்டார்கள். இந்தச் சிறிய உடம்பில் இமய மலையைப் பதம் பார்த்த வழுதியின் ரத்தம் ஓடுவது அவர்களுக்குத் தெரியவில்லை. கடலளவும் தன் நாட்டை விரித்து முந்நீர் வடிம்பிலே தன் அடியை வைத்து அது தன் பாதத்தை அலம்ப நின்ற பெருவிறல் படைத்த பாண்டியன் உடம்பிலே அன்று இருந்த மிடுக்கு இந்த உடம்பிலும் இருப்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. மன்னரைப் புறங் கண்டு வெற்றிக் கொடி நாட்டி வேள்வி செய்த முதுகுடுமிப் பெருவழுதியின் வலிமை இன்னும் பாண்டிய பரம்பரையிலே குன்றாமற் சுடர் விடுவதை எண்ணிப் பார்க்க அவர்களுக்கு நேரமில்லை; அறிவில்லை; விதியும் இல்லைபோலும்!”

பாண்டியன் நெடுஞ்செழியனுடைய பேச்சில் மிடுக்கு ஏறியது; கனல் குமுறியது; வீரம் வெடித்தது. சொற்கள் அம்புகளைப்போல அடுக்கடுக்காக, வேகமாக, சூடாக வெளி வந்தன. அவையில் இருந்தவர்கள் மூச்சையும் அடக்கிக்கொண்டு கேட்டார்கள். “என்னுடைய வலிமை தெரியாமல் சிறுசொல் சொல்லிய வேந்தரைப் பொருது, அவர்கள் அவ்வளவு பேரையும் வென்று, அவர்கள் முரசத்தையும் அவர்களையும் ஒருங்கே கைக்கொள்ளாவிட்டால், என் குடை நிழலில்