பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பாண்டியன் நெடுஞ்செழியன்

முன்பு மற்ற விலங்குகள் எம்மாத்திரம்? அது சோம்பல் முரித்துக்கொண்டு பாயும்போதல்லவா அதன் பெருமை தெரிகிறது? புலியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளாதவர்கள் அவர்கள். சோழன் புலிக் கொடியைக் கையிலே பிடித்திருக்கிறானே அன்றி, அதன் தன்மையைச் சிறிதும் எண்ணினான் இல்லை. மற்றவர்களும் இவன் வீரத்தை மதியாமல் தாங்களே பெரியவர்கள் என்று புறப்பட்டார்கள். ‘இவன் சிறு பிள்ளையாண்டான்; இவன் நாடு கிடைத்தால் நமக்குப் பெரிய கொள்ளை கிடைக்கும்’ என்று எண்ணி வந்தார்கள். அவர்களை இந்த நாட்டிலே வைத்து நசுக்கியிருக்கலாம். இவன் அப்படிச் செய்யவில்லை. பகைவர் நாட்டிற்கே சென்று ஊர்ப் பெண்கள் அவருடைய தோல்வி கண்டு நானும்படி அங்கேயே அட்டான். என்னே இவன் வீரம்!”[1] என்று பா அலங்கல் சூட்டினார்.

மாங்குடி மருதனார் பாடினார். நக்கீரர் பாடினார். இன்னும் பல புலவர்கள் தலையாலங்கானத்துப் போரையும், அதில் பாண்டியனுக்குக் கிடைத்த வெற்றியையும் பல பல வகையிலே புனைந்து பாடி இன்புற்றார்கள். அந்தப் பாடல்கள் நாட்டு மக்களுக்குத் தமிழ் இன்பத்தையும், மன்னனது புகழையும் ஒருங்கே வெளிப்படுத்தின. அதுமுதல் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனானான். புலவரும் பாண்டி நாட்டு மக்களும் மாத்திரமா அப்படிச் சொன்னார்கள்? அந்தப் போர்க்களத்தில் தோல்வியுற்றவர்களின் நாட்டிலும் அவனுடைய பெயர் இந்தச் சிறப்புடனே வழங்கலாயிற்று.


  1. புறநானூறு.98.