பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
பாண்டியன் நெடுஞ்செழியன்

பெறுவது காதலிலேதான்” என்று கூறினார். மற்றவர்களும் அந்த உண்மையை உணர்ந்தார்கள். அரசனுக்குத் திருமணத்தின் இன்றியமையாமையை எடுத்துரைக்கத் தீர்மானித்தார்கள்.

புலவர்கள் மனம் வைத்தால் எதையும் செய்துவிடுவார்கள். மாங்குடி மருதனார் திருமணத்தைப் பற்றிய செய்தியைச் சொல்லியபோது முதலில் அரசன் ஆர்வமுள்ளவனாகக் காட்டிக்கொள்ளவில்லை. பேரரசர்கள் திருவோலக்கம் கொள்ளும்போது மாதேவியுடன் வீற்றிருத்தல் மரபென்றும், கோலோச்சும் மன்னன் இல்லறம் நடத்திக் காட்டினால் குடி மக்களும் இல்லறத்தை நன்கு நடத்துவார்கள் என்றும் புலவர் எடுத்துக் காட்டினார். நக்கீரனாரும் சேர்ந்துகொண்டார். அறிவும் மதிப்பும் உடைய அவர்களுடைய வாய்மொழி வென்றது. அரசன் திருமணம் புரிந்துகொள்ள உடன்பட்டான்.

பாண்டியப் பேரரசனுக்கு மணம் என்றால் எத்துணைச் சிறப்பாக நடைபெற்றிருக்கவேண்டும்! நாட்டு மக்கள் அவ்வளவு பேரும் அவனைத் தம் உயிரைப் போல எண்ணிப் போற்றினார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் திருமணம் நிகழ்ந்தது போன்ற உவகையில் அவர்கள் மிதந்தார்கள். பிற நாட்டு மக்களும் அரசரும் புலவரும் கலைஞரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். தம்முடைய வாழ்நாளில் அத்தகைய சிறந்த நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை யென்று முதியவர்கள் கூறிக் களிக்கூத்தாடினர்.

புலவரும் பிற கலைஞரும் பெற்ற வரிசைகளைச் சொல்வதா? அயல்நாட்டு மக்கள் கொணர்ந்து