பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. நெடுநல் வாடை

புரட்டாசி தாண்டி ஐப்பசி வந்துவிட்டது. இது கூதிர்ப்பருவம்; அடைமழை பெய்யும் காலம்; வாடைக் காற்று வீசி நடுக்கியெடுக்கும் பருவம். இதை நக்கீரர் தம்முடைய பாட்டில் முதலில் வருணித்தார். நீண்ட வாடை; ஆனால் பாசறையிலிருந்த அரசன் வெற்றி பெறும் நல்ல வாடையாதலால் அந்தக் கால நிகழ்ச்சியைப் பாடிய இதற்கு நெடுநல்வாடை என்னும் பெயரை வைத்தார். அவர் காட்டும் காட்சிகளை நாம் பார்க்கலாம்.

எப்போதும் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. அந்த மழையைக் கண்டு ஆயர்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. ஆடுமாடுகள் மழையில் நனைவதால், மேய்ச்சல் நிலத்தில் மனம் போனபடி போய் மேய முடியாது. எங்கே பார்த்தாலும் வெள்ளம். எப்படி மேய்கிறது? ஆகையால் தண்ணீர் தங்காத மேட்டு நிலமாகப் பார்த்து அங்கே அவற்றை ஓட்டிச் செல்கிறார்கள். வழக்கமாக மேய்க்கும் இடம் அன்றாதலால் அவர்களுக்கு வருத்தந்தான். என்ன செய்வது?

அங்கே வளர்ந்திருக்கும் காந்தள் மலர்கள் மழையால் இதழ் கலங்கிக் காட்சியளிக்கின்றன. உருவமே சிதைந்து போயிற்று, அவர்கள் உள்ளத்தைப் போல. ஒரே குளிர், வெடவெடக்கிறது. பத்துப் பேர், இருபது பேர்களாகக் கூடிக்கொண்டு பெரிய நெருப்பை மூட்டிக் குளிர் காய்கிறார்கள். தம் கைகளை நெருப்