பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48
பாண்டியன் நெடுஞ்செழியன்

பிலே காய்ச்சிக் கன்னத்திலே தடவிக் கொள்கிறார்கள். ஆனாலும் பற்கள் தாளம் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆடுமாடுகள் எப்படி இந்த நிலையில் மேயப்போகும்? மேய்ச்சலையே மறந்துவிட்டன. குரங்குகள் காலைக் கையாலே கட்டியபடி மரத்தின் மூலையில் குந்திக்கொண்டிருக்கின்றன. மரத்திலே வாழும் பறவைகள் வாடைக் காற்று வீசுவதைத் தாங்காமல் அப்படி அப்படியே தரையில் விழுகின்றன. கன்று தாய்ப்பசுவிடம் போய் ஊட்டப் புகுந்தால் அது உதைக்கிறது.

இப்படி மனிதரும் விலங்கும் பறவையும் குளிரால் நடுங்கும் கூதிர்க்காலம் இது. மலையே உள்ளூறக் குளிர்ச்சி பெற்று நிற்கிறது.

முசுண்டைக் கொடி பூக்கும் காலம் இதுதான். அதில் வெள்ளை வெளேரென்று பூ மலர்ந்திருக்கிறது. அதனோடு அங்கங்கே உள்ள புதர்களில் பீர்க்கங்கொடி ஓடிக்கிடக்கிறது. அதில் பொன்னைப் போன்ற மலர் மலர்கிறது.

நீரோட்டத்தால் சில இடங்களில் சேறும் சில இடங்களில் ஈரமணலுமாக இருக்கின்றன. மழை நீர் ஓடும் இடங்களில் கயல் மீன்கள் அந்த நீரோட்டத்துக்கு எதிரே வருகின்றன. அருகே மணலில் இருந்தபடியே கொக்குகளும் நாரைகளும் அந்த மீன்களைக் கொத்துகின்றன.

கார்ப் பருவத்தில் நன்றாக மழை பெய்தது; இப்போது தூறல் வீசுகிறது.

அகன்ற வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலை சாய்ந்து நிற்கின்றன. கமுக மரங்களில் காய்