பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுநல் வாடை

53

புல்லைக் குதட்டிக்கொண்டு நிற்கின்றன. நிலா முற்றத்திலிருந்து மழைநீர் அருவியைப் போல விழுகிறது. மகர வாயைப்போல் உள்ள துவாரத்தின் வழியே நீர் வந்து விழுகிறது. ஒரு பக்கத்தில் மயில்கள் ஆரவாரிக்கின்றன. அவற்றின் குரல் ஊதுகொம்பின் ஓசையைப் போலக் கேட்கிறது. இந்த ஒலிகள் மலையிலே சிலையோடுவது போல இங்கே எதிரொலி செய்கின்றன.

இந்த அரண்மனையின் பின்னே தான் அந்தப்புரம் இருக்கிறது. பாண்டியனத் தவிர வேறு ஆடவர் யாரும் அதில் நுழைய முடியாது. ஆண் வேலைக்காரர்கள் கூட நுழைய உரிமை இல்லை. அதற்குள் அங்கங்கே பாவை கையில் ஏந்தி நிற்கும் கோலத்தில் அமைந்த விளக்குகள் எரிகின்றன. நிறைய நெய்யும் பெரிய திரியும் இட்டிருக்கிறார்கள். இந்த விளக்குகள் யவன தேசத்திலிருந்து யவனர் கொண்டு வந்தவை; அழகான வேலைப்பாடு உடையவை.

அந்தப்புரமும் பெரியதுதான். அது குன்றுபோல இருக்கிறது. வானவில்லைப்போல அங்கங்கே பல நிறமுள்ள கொடிகளைக் கட்டியிருக்கிறார்கள். சுவர்களில் பூசிய சுண்ணம் வெள்ளியைப்போலப் பளப்ளக்கிறது. தூண்கள் நீல மணியினால் அமைந்தவைபோல நிற்கின்றன. சுவர்களோ செம்பினால் வார்த்துப் பண்ணியவை போல உறுதியாக உள்ளன.

சுவர்களில் மலர்கள் பூத்த கொடியின் உருவத்தை வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்கள். இதுதான் மாதேவி இருக்கும் இடம்; பள்ளியறை. கட்டிலின் மேல் அவள் படுத்திருக்கிறாள்.