பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
பாண்டியன் நெடுஞ்செழியன்


அது வட்டமான தந்தக் கட்டில்; நாற்பது ஆண்டுகள் முதிர்ந்த யானையின் தந்தத்தைச் செதுக்கி நுட்பமான பூ வேலைகளைச் செய்தமைத்தது; நன்றாகக் கடைந்து அமைத்த திரண்ட குடங்களையும், உள்ளிப் பூண்டுபோல விட்டு விட்டுப் புடைத்த கால்களையும் உடையது. சுற்றிலும் முத்து மாலைகளைத் தொங்க விட்டுத் திரை கட்டி நடுநடுவே சாளரம் விட்டிருக்கிறார்கள். கட்டிலின்மேல் மெல்லிய மயிர்களுக்கு நிற மூட்டிப் பரப்பி, சிங்கம் வேட்டையாடுவது போன்ற சித்திரத்தை நடுவிலே அமைத்து, சுற்றிலும் முல்லை, முதலிய பல நிறமுள்ள பூவை வரிசையாக இட்டிருக்கிறார்கள். இதற்கு மேலே மெல்லிய படுக்கையை விரித்து அன்னத்தின் அடிவயிற்றுத் தூவிகளாற் செய்த அணைகளை வைத்திருக்கிறார்கள். அதற்குமேல் கஞ்சியிட்டு நன்றாக வெளுத்த மடியை விரித்திருக்கிறார்கள். அதன்மேல் பாண்டிமா தேவி படுத்திருக்கிறாள்.

ஆரம் அணியும் மார்பில் இப்போது வெறும் தாலி மட்டும் புரள்கிறது. நாயகனைப் பிரிந்தபோது அலங்காரங்கள் எதற்கு? மயிரைக் கோதிக்கொள்ளாமையால் அது நெற்றியிலே கிடந்து புரள்கிறது. காதில் குழை இல்லை; வெறும் தக்கையை அணிந்திருக்கிறாள். பொன் வளையல்களை அணிந்திருந்த கைதான்; அதில் இப்போது மங்கலத்தின் அடையாளமாகிய சங்குவளை மாத்திரம் இருக்கிறது; திருமணத்திலே கட்டிய காப்பு நாண் இருக்கிறது. விரலில் ஒரு முடக்கு மோதிரம் மாத்திரம் காட்சியளிக்கிறது. பூ வேலை செய்த உயர்ந்த துகிலை அணியும் இடையிலே மாசு ஏறிய நூல் புடைவையைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். வர்ணம் தீற்றாமல் வெறும் கோடுகள் மாத்திரம்