பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61
புலவர் அறிவுரை


“நீர் இல்லாவிட்டால், உடம்பு பெற்றவர்கள் வாழமுடியாது. உடம்பு வளர உண்டி கொடுத்தவர் யாரோ, அவர்கள் உயிர் கொடுத்தவரே ஆவர். சோற்றால் எடுத்த சுவராகிய இந்த உடம்பு உணவு காரணமாக வளர்வது. உணவு என்று சொல்வது எது? நிலமும் நீரும் சேர்ந்தால் உணவு வரும். நீரையும் நிலத்தையும் ஓரிடத்திலே சேர்த்தவர்கள் உடம்பையும் உயிரையும் சேர்த்துப் படைத்தவர்கள் ஆகிறார்கள். எவ்வளவு அகன்ற நிலமானாலும், விதைத்துவிட்டு வானத்தை நோக்குவதாக இருந்தால் அதனால் அரசனுக்குப் பயன் இல்லை. நீர் குறைவின்றிக் கிடைக்கும்படி செய்தால் நிலம் வளம் சுரக்கும். ஆதலால் இதனை மறவாமல் விரைவில் பள்ளமான இடங்களிலே குளமும் ஏரியும் அமையும்படியாகக் கரை போட்டு நீரை யார் தேக்குகிறார்களோ அவர்கள் தம் புகழை இவ்வுலகில் தேக்கிக்கொள்கிறார்கள். அப்படித் தேக்காதவர்கள் இவ்வுலகில் தம் பெயரைத் தேக்காதவர்களே!”

புலவர் பொதுவாகச் சொன்னாலும், “நீ ஏரி குளங்களைச் செப்பஞ் செய்தும் புதியனவாக அமைத்தும் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள் நன்றாக விளையும்படி செய்யவேண்டும்” என்பதையே குறிப்பாகப் பெறவைத்தார்.

பாண்டியன் அறிவுடையவன்தானே? தான் செய்ய மறந்த கடமையை அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உணர்ந்துகொண்டான்.

“ஆம், நீங்கள் கூறியது சாலச் சிறந்த உண்மை. இதுகாறும் போரில் சிந்தை செலுத்தியமையால் நான் நீர்நிலைகளை மறந்துவிட்டேன். உண்டி கொடுத்தோர்

பா–5