பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
பாண்டியன் நெடுஞ்செழியன்

உயிர் கொடுத்தோரே என்பதை இனி எக்காலத்தும் மறவேன்” என்று நெடுஞ்செழியன் சொல்வதைக் கேட்டு எல்லோர் நெஞ்சுகளும் குளிர்ந்தன. அவர்கள் உள்ளங்களில் நீர் தேங்கியதைப்போல் ஒரு நிறைவு உண்டாயிற்று. போர் ஆசையால் இன்பத்துக்கு இடையூறு உண்டாவதை உணர்த்தியும் மாறாத அரசன், உணவு விளைக்கும் அறத்துக்குத் தடையாகப் போர் இருப்பதை உணர்ந்துகொண்டான். அது அவன் ஒருவனுடைய நலம். இது குடிமக்கள் அனைவருக்கும் வாழ்வளிக்கும் நலம் அல்லவா?

குடபுலவியனாரைத் தனியே புலவர்கள் பாராட்டினார்கள். “உங்கள் சொல் செல்லும் சொல் ஆயிற்று; வெல்லும் சொல்லும் ஆயிற்று” என்றார்கள்.

“நம் நினைப்பு முழுமையும் கைகூடட்டும். அதற்குள் அவசரப்பட வேண்டாம்” என்றார் குடபுலவியனார்.

அரசனுக்குக் கூறிய அறிவுரையை அவர் பின்பு கவிதை வடிவத்தில் அமைத்துத் தமிழ் இலக்கியக்கோவையிலே ஒளிரும் முத்தாக்கிவிட்டார்.”

*புறநானூறு,18.