பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. மருதனார் படைத்த பாட்டு

ரசன் தன்னுடைய சிந்தையையும் செயலையும் நாட்டுநலத்திலே திருப்பத் தொடங்கினான். எங்கெங்கே பழைய ஏரிகளும் குளங்களும் இருக்கின்றன என்று கணக்கெடுத்தான். அவற்றின் நிலையைப்பற்றி விசாரித்தறிந்தான். கரையைச் செப்பம் செய்ய வேண்டிய இடங்களில் அவ்வாறே செய்யச் செய்தான். புதிய கரை எடுக்கவேண்டிய இடங்களில் எடுக்கப்பணித்தான். அவற்றோடு நில்லாமல் குடபுலவியனார் சொன்னபடி பள்ளமான இடங்களில் அகழ்ந்தும், கரை போட்டுத் தடுத்தும் புதிய நீர்நிலைகளை உண்டு பண்ணினான். அரசன் எதை நினைத்தாலும் நன்றாகச் செய்கிறான் என்று குடிமக்கள் பாராட்டினார்கள். ‘போர்க்களத்துக்குச் சென்று பொருது வெற்றி பெறுவதில் மாத்திரம் அரசன் வல்லவனாக இருக்கிறானே!’ என்று கவலையடைந்த பெருமக்கள், ‘இவன் எதை மேற்கொண்டாலும் திருத்தமாகச் செய்கிறான்’ என்று உணர்ந்து மகிழ்ந்தனர்.

அங்கங்கே நீர்நிலைகள் புதிய மணமகளைப்போலப் புதிய கோலத்தைப் பூண்டு விளங்கின. இனித் தம்முடைய ஆற்றலால் பயிர் விளைத்து உணவுப் பொருளைக் குவிக்கலாம் என்று வேளாளர்கள் உள்ளம் பூரித்தனர். நாட்டில் வேளாளர்கள் நல்ல நிலையில் இருந்து தம்முடைய தொழிலைச் செவ்வனே செய்து வந்தால்தான் அரசனுடைய பெயரும் பொருளும் நிற்