பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பாண்டியன் நெடுஞ்செழியன்

இருந்தால் அல்லவா அஞ்ச வேண்டும்? அவர் சொல்லை வேற்று நாட்டு மன்னர்களே ஏற்றுப் போற்றி நடப்பார்களென்றால், பாண்டியன் கேட்பதற்குத் தடை என்ன?

நல்ல வகையில் பயன் உண்டாகும் வண்ணம் தாம் அறிவுரை கூற வேண்டும் என்பதை உணர்ந்த அப்பெரும் புலவர் ஏதேனும் ஒரு நெடும் பாட்டின் வாயிலாக அதனைச் செய்ய முடிவு செய்தார். அரசர்களுக்கு உண்மையைக் கவியின் மூலம் எடுத்துரைப்பது பழம் புலவர் மரபு.

அரசனுக்குப் போரில் உள்ள மோகத்தைப் போக்க வேண்டும் என்பதே புலவரின் கருத்து. ஆனால் அதனை நேரே சொல்வது முறையன்று. வீரம் செறிந்த மன்னர்களின் குலத்தே உதித்தவர்கள் மிடுக்கான பண்புடையவர்கள். அவர்களுக்குச் சாந்தமான இயல்பு உண்டாக வேண்டுமானால், பொருளும் வெற்றியும் நெடுநாள் நில்லாதன என்று சொல்ல வேண்டும். தமிழில், காதல் அல்லாத மற்றவற்றைச் சொல்லும் பாடல்கள் புறத்திணையைச் சார்ந்தவை. அது போர்ச் செயலிலுள்ள பல பகுதிகள், அவரவர்கள் ஆற்றும் கடமைகளைப்பற்றிக் கூறும் பகுதிகள் முதலியவற்றை உடையது. காஞ்சி என்பது ஒரு பகுதி. அது நிலையாமையை எடுத்துக் கூறுவது. இம்மை வாழ்க்கையில் அறம் புரிந்து பொருள் ஈட்டி இன்பம் துய்ப்பவனுக்கு மறுமை இன்பமாகிய வீட்டிலும் விருப்பம் உண்டாக வேண்டும். இவ்வுலக வாழ்வையே முடிந்த முடிபாகக் கொள்ளாமல் இதன் நிலையாமையை உணர்ந்தால் அந்த விருப்பம் எழும். அப்படி உணர்ந்தவனுக்கே