பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


9. ஐந்திணை வளம்

மேகங்கள் கீழ்கடல் நீரை மொண்டு உண்டு மேற்கே சென்று யானைகளும் நடுங்க மலைகளின்மீது இரவும் பகலும் விடாமல் மழை பொழிகின்றன. எங்கும் வெள்ளக் காடு. மலையிலிருந்து அருவி ஓடி வருகிறது. யானைகளெல்லாம் அஞ்சும்படி அது ஒலிக்கின்றது. அருவி கீழே வந்து கீழ்கடலை நோக்கி ஆறாக ஓடுகிறது. போகும் வழியில் உள்ள குளங்களை யெல்லாம் நிரப்பிச் செல்கிறது.

இப்படி எங்கும் நீர்வளம் மிகுவதனாலே கழனிகளில் நெற்பயிர் விளைந்து, கதிர்கள் முற்றித் தோன்ற நிற்கின்றது. யானை புகுந்தால் அது மறையும்படியாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. அங்கங்கே உள்ள சிறிய குளங்களில் தாமரை பூத்திருக்கிறது. நெய்தலும் நீல மலரும் ஆம்பலும் வளர்கின்றன.

இந்த இடங்களிலுள்ள மீன்களை வலைஞர் பிடிக்கிறார்கள். பிடித்துக் குவிக்கிறார்கள். அவர்கள் போடும் ஓசை ஒரு பக்கம் ஒலிக்கிறது. கரும்பு ஆலைகளின் ஓசை ஒரு சார் கேட்கிறது. களை பறிப்பவர்கள் செய்யும் ஆரவாரம் ஒருபுறம். சேற்றிலே தங்கிய எருதின் அயர்ச்சியை மாற்ற உழவர்கள் செய்யும் ஆரவாரம் ஒரு பக்கம். நெல் முற்றிய கழனியில் அறுவடை செய்பவர்கள் கொட்டும் பறையோசை ஒரு சார். அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் விழாக் கொண்டாடும் முழக்கம் ஒரு திசை. ஆற்றிலே புதுவெள்ளம் வந்ததனால் காதலரும் காதலிமாரும் அந்நீரில் மகிழ்ச்சி.

பா-நெ-6