பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79
ஐந்திணை வளம்

மகளிர் கிளிகளை ஓட்டும் ஒலி இது. அவரைக்கொடியை மேயும் காட்டுப் பசுவை வேடர்கள் ஓட்டுகிறார்கள். அந்த ஓசைதான் அது. பரணின் மேலே காவல் இருக்கும் குறவன் குழியைத் தோண்டி மேலே மூடி வைத்திருக்கிறான். அதில் காட்டுப் பன்றி விழுந்துவிட, அதைக் கொன்று ஆரவாரம் செய்கிறான். அந்த ஒலியை இதோ கேட்கிறோம். வேங்கை மரத்திலுள்ள மலர்களை மகளிர் புலிபுலியென்று சொல்லிக்கொண்டே பறிக்கிறார்கள். அவர்களுடைய ஒலியையும் கேட்கிறோம். காட்டுப் பன்றியைக் கொன்ற புலி முழங்குகிறது. இத்தனை வகையான ஓசைகளும் அருவியின் ஓசையோடே மாறி மாறி ஒலிக்கின்றன. மலைகளையுடைய குறிஞ்சி நிலம் இத்தகைய காட்சியை அளிக்கிறது.

சில இடத்தில் பாலை நிலமும் இருக்கிறது. தமிழ் நாட்டில் கோடை மிகுதியானபோது நீரற்று நிற்கும் நிலம் பாலையாகிவிடும். இயற்கையாகவே பாலையாக என்றும் உள்ள நிலம் இல்லை. பாலையில் மூங்கில்கள் உராய்வதனால் பிறந்த பெரு நெருப்பு, தூறுகளை யெல்லாம் எரிக்கிறது. அதனால் வலியிழந்த யானைகள் மேய ஒன்றும் இல்லாமல் வேறு இடத்தை நோக்கிச் செல்கின்றன. அருவிகள் வற்றிப் போன அழகில்லாத மலைகள் நிற்கின்றன. எங்கே பார்த்தாலும் ஊகம் புல். அவையும் உலர்ந்து வைக்கோலைப் போலத் தோன்றுகின்றன. மேல் காற்று வீசும்போது அது மலையின் பிளப்புகளிலும் குகைகளிலும் புகுந்து புறப்படுகிறது. அப்போது கடலில் ஆரவாரம் போன்ற ஓசை எழுகிறது.