பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரை மாநகர்

83

மாலைகளை விற்பவர்களும், வாசனைச் சுண்ணத்தை விற்பவர்களும், பாக்கு வெற்றிலை சங்குச் சுண்ணாம்பு ஆகியவற்றை விற்பவர்களும் அஞ்சி ஒதுங்கி நிற்கிறார்கள். படைஞர் போன பிறகு அச்சம் நீங்கி அவர்களும் மற்றப் பண்டங்களை விற்றுக்கொண்டு திரிபவர்களும் மலையைப் போன்ற மாடங்களின் நிழலிலே தங்கியிருக்கிறார்கள். அழகிய மங்கையரும் இளைய மைந்தரும் ஒன்றுபட்டு இன்புறுவதற்கு ஏற்ற பண்டங்களையும் பூவையும் நரைத்த கூந்தலையுடைய முதிய பெண்டிர் வீடு வீடாகச் சென்று விற்கிறார்கள். இந்தப் பண்டங்களை அங்கங்கே உள்ள மக்கள் வாங்கிக்கொள்கிறார்கள். அப்படிக் கொள்ளக் கொள்ளக் குறையாமலும், பலரும் புதிய பண்டங்களைக் கொண்டுவரக் கொண்டுவர மிஞ்சிப் போகாமலும் விளங்குகிறது நாளங்காடி. அது மேகம் முகந்து செல்வதாற் குறையாமலும் ஆறுகள் பாய்வதால் மிகாமலும் உள்ள கடலைப் போல அல்லவா தோன்றுகிறது?

எங்கும் மாடங்கள் விளங்கும் கூடல் நகரில் விழாத் தொடங்கி ஏழு நாட்களாகியமையால் இன்று தீர்த்தவாரி நடக்கிறது. அதனால் மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

அந்திவானத்தைப் போன்ற சிவந்த நிறத்தையும் நுட்பமான பூத்தொழிலையும் உடைய கலிங்கத்தை இடையிலே கட்டி உடைவாளைத் தொங்க விட்டுக் கொண்டு தோளிலே தானை புரளக் காலிலே கழல் திகழ மார்பிலே மாலை மணக்கத் தேரின் மேலேறி அருகிலே காலாட்கள் காவல் செய்யச் செல்லும் செல்