பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
87
மதுரை மாநகர்

கடைகளை அடைக்கிறார்கள். மகளிர் துயில்கிறார்கள். வெல்லப் பாகினாலே உண்டாக்கின அடையையும் பருப்பும் தேங்காயும் உள்ளே வைத்த மோதகத்தையும் அப்பத்தையும் விற்பவர்கள் அப்படி அப்படியே தூங்குகிறார்கள். கூத்தாடுகிறவர்களும் கூத்த நிறுத்தித் துயில் கொள்கிறார்கள். கடல் அலை யடங்கினது போல யாவரும் ஓசையடங்கித் துயில்கிறார்கள்.

இப்போது நள்ளிரவு. சரியாக இரவு பதினைந்து நாழிகை. காலிலே செருப்பும் இடையிலே கச்சும் நூலேணியும் கையில் உளியும் வாளும் கொண்டு, வரும் கள்வரைத் தேர்ந்து, தூங்காத கண்னோடு காவலர்கள் திரிகிறார்கள். அவர்களுக்குத் திருட்டு நூலும் தெரியும்; காவல் நூலும் தெரியும். மழை மிகுதியாகப் பெய்தாலும் அவர்கள் வில்லும் அம்பும் கைக்கொண்டு தளர்ச்சியில்லாமல் உலாவுவார்கள்.

மூன்றாம் சாமத்தில் தெய்வங்கள் உலாவுவதாகச் சொல்வார்கள். நள்ளிரவும் மூன்றாம் சாமமுங் கழிகின்றன. நான்காம் சாமம் வந்துவிட்டது.

கட்டவிழ்கின்ற மலர்களையுடைய பொய்கையில் தாதை உண்ணும் தும்பிகள் முரன்றார்போல மறை ஓதும் அந்தணர்கள் வேதத்தைப் பாடுகிறார்கள். யாழில் வல்லவர்கள் காலைக்குரிய மருதப் பண்ணை வாசிக்கிறார்கள். குத்துக்கோற்காரர்கள் யானைக்குக் கவளம் கொடுக்கிறார்கள். குதிரைகள் புல்லைக் குதட்டுகின்றன. பல பண்டங்களை விற்கும் கடைகளை ஏவலர் மெழுகுகிறார்கள். இனிய குடிவகை விற்கும் கடையில் இப்போதே வியாபாரம் தொடங்கிவிட்டது. இல்வாழ் மகளிர் எழுந்து, சிலம்பொலிக்கக் கதவுகளைத் திறக்கிறார்கள். திறக்கும் ஓசை கேட்கிறது. நின்று ஏத்தும்