பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பாண்டியன் நெடுஞ்செழியன்

சூதர்கள் வாழ்த்து இசைக்கிறார்கள். இருந்து ஏத்துவார் புகழ் பாடுகிறார்கள். வேதாளிகர் நாழிகை இவ்வளவு ஆயிற்றென்று அறிவிக்கிறார்கள். பள்ளி யெழுச்சி முரசு முழங்குகிறது.

எருதுகள் ஒன்றோடு ஒன்று மாறி மாறி ஒலி யெழுப்புகின்றன. கோழி கூவுகிறது. கரிச்சான் குருவியும் அன்னமும் கரைகின்றன. மயில்கள் அகவுகின்றன. பிடியோடு நிற்கும் களிறுகள் பிளிறுகின்றன. கூட்டிலே உறையும் கரடிகளும் புலிகளும் முழங்குகின்றன.

இரவிலே தம் கணவரோடு ஊடிய மகளிர் முத்து மாலையைக் கழற்றி எறிந்திருக்கிறார்கள்; மணல் முற்றத்தில் அந்த முத்துக்களோடு பாக்கும் வாடிய பூவும் ஆபரணங்களும் இறைந்து கிடக்கின்றன. அவற்றை ஏவலர் பெருக்குகிறார்கள்.

இத்தகைய காட்சிகளை நாலாவது சாமமாகிய விடியற்காலத்தில் காணுகிறோம்.

இப்படிச் சிறந்து ஓங்கி நிற்கும் மதுரையிலே அரசனுடைய வெற்றிச் சிறப்பால் பலவகைப் பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. பெருந் தோளையுடைய மழவரை ஓட்டியதால் அவர் விட்டுப்போன யானைகளும், பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்த புரவிகளும், பகைவரூரைச் சுட்டு அங்கிருந்து கொண்டு வந்த ஆநிரைகளும், வேற்று நாட்டு மதிலை இடித்துக் கொணர்ந்த மதிற் கதவுகளும், பணிந்து போன மன்னர்கள் திறையாகக் கொண்டு வந்து கொடுத்த கலன்களும் பிறவும் கடலிலே கங்கையாற்று வெள்ளம் சென்று சேர்ந்நாற்போல இந் நகரிலே வந்து சேர்ந்திருக்கின்றன.