பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
89
மதுரை மாநகர்


இவ்வாறு வளம் பெற்ற மதுரையின் அமைப்பையும் அங்கு வாழ்வார் செயல்களையும் விரித்துக் கூறி விட்டு நெடுஞ்செழியனை வாழ்த்துகிறார் புலவர்.

இரவிலே மாதேவியோடு துயின்று விடியலில் எழுந்து ஆடையணி புனைந்து தெய்வத்தை, வழிபடுவர் அரசர். அப்பால் திருவோலக்கத்திலிருந்து, பல்வேறு வீரச் செயல்களைச் செய்த படைத் தலைவர்களையும், வீரர்களையும் அரசியற்கருமம் செய்பவர்களையும், புலவர்களையும், பாணரையும், விறலியரையும், கூத்தரையும் அழைத்து வரச் செய்வர். பின்பு அவரவர்களுக்கு வேண்டிய வரிசைகளை வழங்குவது மன்னர் இயல்பு. “அவ்வாறே செய்து முதுகுடுமிப் பெருவழுதியைப்போலக் கேள்வித் துறை போகிய ஆசாரியர்களோடு கலந்து நட்பாடியும் பெரியோர்களின் உபதேசங்களைக் கேட்டும் வீட்டு நெறிக்குரிய பெரும் பொருளைக் கற்றும் புகழ் பெற்றுச் சுற்றத்தாரோடு இனிது விளங்கி நீடூழி வாழ வேண்டும்” என்று. வாழ்த்தி மதுரைக் காஞ்சியை முடிக்கிறார் மரங்குடி மருதனார்.

மகிழ்ந்தினிது உறைமதி பெரும,
வரைந்து நீ பெற்ற நல்லூழி யையே*

என்று முடிகிறது பாட்டு.

இந்த அழகிய பாட்டும் நக்கீரர் பாடிய நெடுநல்வாடையும் பத்துப் பாட்டு என்ற சங்கத் தொகை நூலில் சேர்க்கப் பெற்றுள்ளன.


  • பெருமானே, நினக்கென்று வரையறுக்கப் பெற்று நீ கொண்ட நல்ல வாழ்நாள் முழுதும் மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக!