பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பாபு இராஜேந்திர பிரசாத்



பாரதத்தின் முன்னாள் பிரதமராகவும், அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபையின் முன்னாள் பொதுச் செயலாளராகவும், மகாத்மா காந்தியடிகளின் அரசியல் வாரிசாகவும், மனிதருள் மாணிக்கம் என்று இந்த மாபெரும் ஞாலத்தால் போற்றிப் புகழப்பட்டவருமான பண்டிதர் ஜவகர்லால் நேரு “ஜவஹரின் சுய சரித்திரம்” என்ற நூலில் 843 முதல் 845 வரையுள்ள பக்கங்களில் மேற்கண்டவாறு, டாக்டர் இராஜேந்திர பிரசாத்தின் பண்புகளை, வழங்கியுள்ளார்.

அதற்கேற்ப, இரோசேந்திர பிரசாத் மிக எளிய தோற்றம் உடையவர்; அமைதியான ஒளி நிலா, அன்பு உருவான தென்றல்; அடக்கமே தவழ்கின்ற அருவிச் சுனை! அருள் சுரக்கின்ற விழிகள்; புன்னகை மணக்கும் பூத்தமல்லி, இனிய பேச்சு நல்ல செயல்கள் துய சிந்தனைகள், வெற்றி பெற்றால் சிரிப்போ, தோல்வியைச் சுமந்தால் சலிப்போ இல்லாமல், பாடறிந்து ஒழுகும் இத்தனை பண்புகளும் இதழ் இதழாக அன்றலர்ந்த தாமரை போல காட்சி தரும் குணசீலர் இராஜேந்திர பாபு அவர்கள்.

முறுவல் எப்போதும் முகாமிட்ட முகம்; வீரத்தில் தீரர்; கிராமத்தான் போன்ற காட்சிக்குரியவர்; ஆனால் ஏறுநிகர் நெஞ்சம்; தியாகத்தில் வைரம்; எண்ணற்ற இவையொத்த சுபாவங்கள் இராஜேந்திர பிரசாத்துக்கு இயற்கையாகவே அமைந்து விட்ட காரணத்தால்தான், அவர் அகிலம் போற்றும் முதல் குடியரசுத் தலைவரானார். அந்தப் பதவி அவரால் தகுதி பெற்றது. அவனியும் அதை அறிந்தது.

நமது இந்திய நாடு விடுதலை பெற்றிடத் தன்னலம் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு பெருந்தியாகம் செய்தவர்களில், டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத்தும் ஒருவர்