பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பாபு இராஜேந்திர பிரசாத்

செய்வார். இந்தத் திருவிழா நாட்களில் அவர் விரதமும் இருப்பார். ஆலய வழிபாடுகளுக்குச் செல்வார். தரிசனம் செய்வார். இறுதி வரை ஆழ்ந்த ஆன்மிகப் பற்றோடும், நம்பிக்கையோடும், இறையுணர்வோடும் அவர் வாழ்ந்தவர் என்பதற்குரிய அடையாளமாகவே அவர் வாழ்ந்து காட்டினார்.

கிராம மக்களது நன்மை தீமைகள், வாழ்வு சாவுகள், திருமணம் திருவிழாக்கள் போன்ற எல்லாவற்றிலும் ஒவ்வொரு வீட்டாரும் கலந்து கொண்டு பங்கேற்பார்கள். அது போலவே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாபுவும் கலந்து கொண்டு பங்கேற்பார். அந்தப் பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரையும் உறவின் முறையாக்கிக் கொள்வதுமுண்டு. இதனால் கிராமவாசிகள் உண்மையானவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், சூதுவாது, கபடமற்றவார்களாகவும் இருப்பார்கள். இராஜேந்திரரிடமும் இதே கிராமீயப் பண்பாடுகள் மிக அதிகமாகக் குடிகொண்டு ஒரு கிராமத்ததானைப் போலவே உருவாக்கி விட்டது எனலாம். அதனால்தான், பாபு சாகும் வரை கிராம மக்களின் மனிதாபிமானத்தைப் பெற்ற ஒரு தனி மனிதராகவே காட்சி தந்து மறைந்தார்.

எனவே, ரஜேந்திர பிரசாத்தின் கிராமக் கல்வி, கிராம ஆன்மீகம், கிராம விவசாயம், கிராமப் பழக்கவழக்கங்கள், கோயில், திருவிழா, சந்தை, கொண்டாட்ட ஆரவாரக் கோலாகலங்கள், தெய்வீக உணர்வுகள் அத்தனையும் அவரிடம் இறுதிவரை குடிகொண்டிருந்தன.