பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

27

அவசியமில்லை. கேலி, கிண்டல் செய்வோர் நம்மீது நல்லெண்ணம் உடையவர்களா? இல்லையே! அவர்களிடம் அறிவும் வலிமையும் இருக்காது. ஆனால் பெருந்தன்மையான எளியவர்களோ அவர்களைப் பார்த்து இரங்க நேரிடும்.

அன்புள்ள அண்ணா, வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே ஆசை! நாட்டுக்கு ஏதாவது ஒரு சேவையாவது செய்தாக வேண்டும் என்பதே. சேர்வாரிடம் சேர்ந்து விட்ட பழக்கத்தால் ஏற்பட்டு விட்ட குணத்தால் இந்த ஆசை வந்ததோ என்று சிலர் எண்ணுவர். பரோபகாரம் செய்து உலகுக்கு நல்லவனாக நடமாட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை முதன் முதலில் எனக்குப் போதித்தவரும் அதற்குரிய பாதையைக் காட்டியவரும் எனது அண்ணனாகிய தாங்களே அல்லவா? அதனால்தான் இதை நினைவு படுத்துகிறேன்.

என்னை லண்டனுக்கு அனுப்பி ஐ.சி.எஸ்.பட்டப் படிப்பை படிக்குமாறு நமது குடும்பம் ஊக்குவித்தது. ஆனால், அப்போது தங்களது கருத்து என்னவோ, அது எனக்குத் தெரியாது. காரணம் நமது அப்பா அப்போது எடுத்த முடிவு அது எனக்கு அப்போது அந்தக் கல்வியில் ஆர்வம் இல்லை. ஏனென்றால், அந்தக் கல்வியில் வெற்றிபெற்றுத் திரும்பினால், எனது ஆசைக்கேற்ப பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டு விடும். அப்போதும் கூட எனது கருத்துக்களைத் தங்களிடம் கூறினேன். தங்களது எணத்தை எனக்கும் தெரிவித்தீர்கள்.

மற்றொரு சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது. தைரியமாக எனது எண்ணத்துக்கு ஆதரவு காட்டுங்கள். தங்களுக்கு எனது எண்ணங்கள் மீது உடன்பாடில்லை என்றால், அதற்காக நான் வருந்துவேனே அல்லாமல் ஆச்சரியப்படமாட்டேன்.

எதிர்காலத்தில் குடும்பம் என்னால் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காகவே, நீங்கள் என்னிடம் அன்பு