பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

42

அதிகமாகக் கூடின. கல்வி வாணிகம் போல இருந்ததைக் கண்ட ராஜன்பாபு கல்வித் துறை வகுப்புக்களுக்குரிய சம்பள விகிதங்களையும், பிற செலவுகளையும் குறைக்க ஏற்பாடுகள் செய்தார்.

பல்கலைக் கழகப் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிகம் சேர ராஜேந்திரர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். கல்லூரி பயிற்சி நேரத்தைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்தார். பல்கலைக் கழக வளர்ச்சிக்கு மேற்கண்ட ஆக்கப் பணிகளைச் செய்தார்.

இந்த நேரத்தில்தான், மகாத்மா காந்தியடிகள் வெள்ளையராட்சியை எதிர்த்து ஒத்துழையாமைப் போரைத் துவக்கினார். அந்தப் போராட்டத்திலே ராஜன் பாபுவும் கலந்து கொண்டார். இதன் எதிரொலியாக, அவர் பல்கலைக் கழக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்தார். பல்கலைக்கழக அதிகாரிகள் அவரது பதவித் துறப்புக் கடிதத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் மிக வருத்தத்துடன் ஏற்றார்கள்.

இந்திய இளைஞர்களுக்குப் போதிக்கப்பட்டு வரும் ஆங்கிலக் கல்வி முறைகளை எதிர்த்து, இந்திய தேசீயக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற காந்தியடிகளாரது கருத்துக்கள் அப்போது, நாடெங்கும் பரவி வந்தது. பல மாகாணங்களில் காங்கிரஸ் மகா சபை தேசியக் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியது.

பாட்னா நகரில் பீகார் வித்யா பீடம் என்ற தேசியக் கல்வி நிறுவனத்தை 1920-ஆம் ஆண்டு காந்தியடிகளைக் கொண்டு ராஜன்பாபு தோற்றுவித்தார். ஆங்கிலம் கல்வி முறையில் பாடங்களைக் கற்பிக்காமல், பாரத நாட்டின் பெருமையை உணர்த்தும் கல்விப் பாடங்கள் அந்த வித்யா பீடத்தில் நடத்தப்பட்டதால், ஏராளமான மாணவர்கள் வித்யா சாலையில் சேர்ந்து படித்தார்கள். அவர்களில் பலர் தேச பக்தர்களாக பிற்காலத்தில் உருவானதைக் கண்ட ஆங்கில ஆட்சி அதை 1930 ஆம் ஆண்டில் பலாத்காரமாக மூடி சீல் வைத்து விட்டது.