பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பாபு இராஜேந்திர பிரசாத்

நீக்கிட ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக விவசாயிகள் பட்ட வேதனைகள் ஒழிந்து அவர்கள் ஓரளவு ஆறுதலும் பெற்றார்கள்.

சம்பரான் போராட்டத்தில் காந்தியடிகளுக்குத் தளபதி போல நின்று, ஊர் மக்களை ஒன்று கூட்டி கடைசி வரை ஒத்துழைத்தவர் ராஜன் பாபுவே ஆவார். இதனால், பாபுக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கும் பேரும் புகழும் மேலும் கூடியது.

மகாத்மாக காந்தியை இந்தப்போராட்டத்தின் போது ராஜன் பாபு சந்தித்ததால் அவரது வாழ்க்கையில் ஓர் அரிய பெரிய மாற்றமே ஏற்பட்டு விட்டது. இதற்கு முன்பே, மாணவர் பருவத்திலிருந்தே, வழக்குரைஞராக இருந்த போதே எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பாபு, மேலும் எளிய வாழ்க்கையோடு, ஒரு கிராமத்துக் குடியாவை உழவனைப் போலவே தனது வாழ்க்கையை நடத்தலானார். ஏழை மக்களுக்கும், எளிய உழவர்களுக்கும், உழைப்பதே தனது மக்கட் சேவை என்பதை உணர்ந்த அவர் - சாகும் வரை, குடியரசுத் தலைவராக ஆனபிறகும் கூட ஏழைபங்காளராக வாழ்ந்து காட்டினார்.

காந்தி பெருமான் தனது சுயசரிதையில் ராஜன் பாபுவைப் பற்றி எழுதும்போது “விரஜ கிருஷ்ண பாபு, ராஜேந்திர பாபு ஆகிய இருவரும் இணையில்லா நண்பர்கள். அவர்களுடைய உதவிகளின்றி நான் ஒரு வேலையும் செய்திருக்க முடியாது. ஓரடியும் நடந்திருக்க முடியாது. அவர்களுடைய தொண்டர்களும், நண்பர்களும், பொது மக்களும் எந்நேரமும் எங்களோடு இருப்பார்கள். குறிப்பாக, ராஜன் பாபுவின் சீடர்களான, சம்பு, பாபு, அனுக்கிரக பாபு, தரணி பாபு, ராம நவமி பாபு போன்றவர்கள் எப்போதும் எங்களுடன் இருந்து வந்தார்கள். விந்தியா பாபுவும், ஜனக்தாரி பாபுவும் அப்போதைக்கப்போது வந்து எங்களுக்கு உதவி செய்தார்கள். இவர்கள் எல்லாரும் பீகாரிகள். இவர்களது முக்கியமான வேலை விவசாயிகளிடமிருந்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொள்வதுதான்.”