பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

51

இருந்து அவந்திகாபாய் கோகலே என்ற அம்மையார் ஒருவரும் புனாவிலே இருந்து ஆனந்திபாய் வைஷம்பாயன், சோட்டலால், தேவதாஸ், சுரேந்திரநாத் ஆகியோரும் வந்தனர். இவர்களை வைத்துப் பாபு ஆரம்பப் பள்ளிகளை மிகவும் மொழிச் சிக்கல் கஷ்டங்களுடன் நடத்தி வந்தார். இந்தப் பெண் ஆசிரியைகளால் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன என்பதை விவசாயப் பெண்கள் தெரிந்து புரிந்து கொள்ளச் செய்யுமாறு போதிக்க வேண்டும் என்றார் பாபு.

ராஜன்பாபு பீகார் மக்களுக்கு கல்வியைப் போதிப்பதோடு நிற்கவில்லை. ஒவ்வொரு கிராமமாகச் சென்று அவரவர்களுக்குத் தேவையான கிராம சுகாதார முறைகளையும் உணர வழிகாட்டினார். எங்கெங்கே ஏழை மக்களிடம் சுகாதாரச் சீர்கேடுகள் நிறைந்திருந்தனவோ, அசிங்க சந்து முனைகளாக இருந்தாலும் சரி, அங்கங்கே எல்லாம் சென்று, பொது மக்களது உதவியாலும், அரசு அதிகாரிகள் உதவியாலும் சுகாதாரம் வழங்கப் பாடுபட்டார்.

குறிப்பாக, கிணறுகளைச் சுற்றிக் குழம்பிக் கிடக்கும் சேறு, நாற்றங்களை நீக்குவதிலும் கொசு மருந்துகளை அடிக்கச் செய்வதிலும், பல வகையான தோல் நோய்களால் அவதிப்பட்ட வயோதிகர்களைக் குணப்படுத்துவதிலும் சுருங்கச்சொல்வதானால், மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலை செய்வதற்கான பழக்க வழக்கங்களையும் மக்களுக்குப் போதித்து, அதிகாரிகள் வரமுடியாத இடங்களில் மக்களைக் கொண்டே பணியாற்றிடும் பழக்கத்தை உருவாக்கியவர் ராஜேந்திர பிரசாத்!

இந்த வேலைகளுக்குரிய மருத்துவர்கள், செவிலியர் தேவையை, இந்தியர் ஊழியர் சங்கம் என்ற அமைப்பின் மூலம் பெற்றார். பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர், பொது நண்பர்கள் எனப்படுவோர் நாள்தோறும் கூடி அந்தந்த இடங்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சுகாதார நல்வழிகளைச் செய்து வரும் நிலையை உருவாக்கினார் பாபு.