பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பாபு இராஜேந்திர பிரசாத்

பார்த்தபடியே பிரமித்துப் போய் உட்கார்ந்து விட்டார். அவருடைய உரையில் உண்மையும் உணர்ச்சியும் உந்தி உந்தி வந்ததைக் காந்தியடிகளும் கேட்டு உடல்புல்லரித்துப் போனர்.

தில்லி சட்மன்ற பேச்சுக்கள் நாட்டிலே ஓர் உணர்ச்சியை உருவாக்கி விட்டன. இதனால் நாடெங்கும் கிளர்ச்சி கட்டுக்கு மீறி நடந்தது. மக்களும் ஆங்காங்கே ரெளலட் சட்டத்தை எதிர்த்து ஊர்வலமும், கண்டனமும், பேரணியும் நடத்தினார்கள்.

மகாத்மா, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட, நாடெங்கும் மக்களது மனோநிலைகளை அறிய சுற்றுப் பிரயாணம் செய்தார். அங்கே நடந்த பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கிளர்ச்சிகளைச் செய்யும் தளபதிகளை ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்ந்தெடுத்தார்.

வங்காளத்தில் சித்த ரஞ்சன்தாஸ் எனப்படும் சி.ஆர்.தாஸ், சென்னையில் ராஜாஜி, குஜராத்தில் வல்லபாய் பட்டேல், உத்தர பிரதேசத்தில் ஜவகர்லால் நேரு, பீகாரில் ராஜேந்திர பிரசாத் போன்றவர்களைப் பேராட்டத் தளபதியாகத் தேர்வு செய்தார். அறப்போர் இயக்கம் தொடங்கு முன்பு, சத்யாக்ரக சபையை அமைத்தார். அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த சபையில் ராஜேந்திர பிரசாத்தும் ஓர் உறுப்பினர்.

இராஜன் பாபு அறப்போருக்கு பீகார் முனையில் தலைமை ஏற்றார். மக்காணம் முழுவதும் பாபு சுற்றுப் பயணம் செய்து படைக்கு ஆள்திரட்டுவதைப் போல சத்யாக்ரகத்துக்கு ஆள் சேர்த்தார்! காந்தியின் திட்டம், அதன் தத்துவம், ரெளலட் கொடுமைகள் என்பனவற்றைப் பற்றி மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார் பாபு. பிரச்சாரம் மிக வேகமாக மாகாணம் முழுவதுமாக எதிரொலித்தது. அதனால், ராஜன் பாபுவை பீகார் காந்தி என்று மக்கள் அன்போடு அழைத்தார்கள்.