பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பாப்பா முதல் பாட்டி வரை

இடத்திலேயே இருக்கும். நான்கு மாதம் ஆகும்போது, குழந்தை கவிழ்ந்து படுக்கவும், தலையைத் தூக்கி நேரில் பார்க்கவும் கூடியதாயிருக்கும். தலையை இரு பக்கங்களிலும் திருப்பவும் முடியும். உட்கார வைத்தால் முன்பக்கமாகச் சாய்ந்துவிடும், நிமிர முடியாது. ஒன்பது மாதம் ஆகும்போதே அது நிமிர்ந்து உட்கார முடியும். ஓர் ஆண்டு ஆகிய பின்னரே, அது படுக்கவும், எழுந்து உட்காரவும் முடியும். இந்த நிலை இருந்தால் தான் நடக்கும் நிலை வரும்.

குழந்தை புன்னகை செய்வது, 4-6 வாரங்கள் கழிந்த பின்னரே. அதன் பின் சில வாரங்கள் சென்றதும், குழந்தை கை கால்களைக் கொண்டு விளையாடவும், நண்பர், அயலார் வேறுபாடு தெரியவும், உணவு கண்டதும், வாயைத் திறக்கவும், படுக்கையில் புரளவும் கூடும். 6-8 மாதமானதும், அது நிமிர்ந்து உட்காரக் கூடியதாக இருக்கும். குழந்தை முதலில் கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி நின்று, முன்னும் பின்னுமாக அசையும். இப்போது கால்கள் உடலினும் விரைவாக வளரும். இந்த நிலையில் அது கால்களை இழுத்துக் கொண்டு நகரத் தொடங்கும். பின்னரே தவழ முடியும். அப்போது அடிக்கடி உட்கார வைத்துப் பழக்கினால், அது சிறிது சிறிதாகத் தவழத் தொடங்கும். அதன் பின் நிற்கவும், இறுதியில் நடக்கவும் ஆற்றலுறும். ஓராண்டு ஆன பிறகுதான், பிறர் உதவியின்றி நடக்கும். குழந்தைக்குத் தக்க உணவு ஊட்டிவந்தால், அது விரைவில் நடக்கத் தொடங்கினாலும், அதன் கால் எலும்புகள் வளையா.

குழந்தை பிறந்த பொழுதிலிருந்தே அழத் தொடங்கலாம். குழந்தை 4-5 மாதமாகும் வரை அது அழும்போது கண்களில் நீர் காணப்படமாட்டாது. குழந்தை, முதல் ஆண்டிலேயே சிறு விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடும். அதைக் கையில் எடுத்து வீசி எறிய முடியும்.