பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

115

இருக்க வேண்டுமே என்று, படித்தவர்கள் கூட விரும்புகிறார்கள். குரோமோசோம்கள் மூலமே குழந்தையின் பாலினம், (ஆண் அல்லது பெண்) தீர்மானிக்கப்படுகிறது. ஆண், பெண் இருவருக்குமே, தலா 23 குரோமோசோம்கள் இருக்கும். ஆணுக்கு எக்ஸ், ஒய் என, இரு வகையான குரோமோசோம்கள் இருக்கும். பெண்ணுக்கு ஒய் குரோமோசோம்கள் கிடையாது. செக்ஸ் குரோமோசோமுக்கு உரிய எண் 23. கணவனின் ஒய் குரோமோசோம், மனைவியின் எக்ஸ் குரோமோசோமுடன் சேரும் நிலையில், ஆண் குழந்தை பிறக்கும். கணவனின் எக்ஸ் குரோமோசோம், மனைவியின் எக்ஸ் குரோமாசோம்களுடன் சேரும் நிலையில் பெண் குழந்தை பிறக்கும். ஆக, குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கணவனின் குரோமோசோம் தான் தீர்மானிக்கிறது. எனவே, பெண் குழந்தை பிறந்தால், பெண்ணைக் குறை சொல்வது தவறு என்பதை, அனைவரும் உணருவது அவசியம்.

ஆரம்பம் முதலே பாதகம்: தமிழகத்தில் சில இடங்களில், பெண் சிசுக்கொலை தொடருகிறது. பெண் குழந்தை பிறந்துவிட்டால், அது வளரும் நிலையில், பெற்றோரின் வசைமொழிகளுக்கு அதிகம் உள்ளாகி, ‘ஏண்டா, இந்த வீட்டில் பிறந்தோம்’ என்ற நினைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாவதும் உண்டு. குழந்தைப் பருவத்திலிருந்தே வசைமோழி என்றால், அப் பெண் பூப் பெய்துவிட்டால், கட்டுப்பாடுகளுக்குக் குறைவிருக்காது. ‘இருட்டிய பிறகு எங்கேயும் போகாதே’ , ‘எதிர் வீட்டு ஜன்னலில் என்ன பாக்குறே’ , ‘அந்தப் பையனோட உனக்கு என்ன பேச்சு’ எனக் கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டுக்கு விருந்தினர் யாராவது வந்துவிட்டால், ‘உள்ளேபோ’ என்ற அரட்டல் உடனே வரும். இப்படி ஆரம்பத்திலிருந்தே நடைபெறும். நிகழ்ச்சிகள் தான், பெண்ணின் மனநலனுக்குப் பாதகமாக அமைகின்றன.