பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

பாப்பா முதல் பாட்டி வரை

காதில் சீழ் வடிதல் : பெரும்பாலும் சளித் தொந்தரவே காதில் சீர் வடிவதற்குக் காரணம். மூக்கில் இருந்து, காதுக்குச் செல்லும் குழாய் மூலம், சைனஸ், மற்றும் மூக்கில் உள்ள சளி, சீழ் ஆகியவை நடுக்காதில் சேர்ந்து, பின்னர் செவிப்பறை இற்று, வெளியே வரத் துவங்கும்.

ஆரம்ப நிலையில் இதுபோன்று வரும் சீழ், சளித் தொந்தரவை, மருந்துகளாலோ, அறுவை சிகிச்சை மூலமாகவோ கட்டுப்படுத்தி விடுவது நல்லது. முக்கியமாக, காது வலி உள்ள குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காதில் சீழ் வடிதல், செவிப்பறையை ஓட்டை ஆக்கிவிடலாம். இதே போல், காதிலுள்ள எலும்புகளும் இற்றுவிடலாம். இதனால், காது கேட்கும் திறனை இழப்பதோடு, சீழ் மூளைக்குப் பரவி, உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு உள்ளது.

காதில் சீழ் வடிவதை கவனத்தோடு, மருந்தாலோ, அல்லது அறுவை சிகிச்சையாலோ நிறுத்தி, எலும்புகளையும், செவிப்பறையையும் (Tympanoplasty) என்ற அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

தங்கஎலும்பு : மூன்று எலும்புகளுமே பாதிக்கப் பட்டிருந்தாலும், அதற்கு 24 காரட், தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்ட செயற்கை எலும்பைப் பொருத்தி, காது கேட்கும் திறனைப் பெற முடியும். ஏற்கெனவே, சில முறை, அறுவை சிகிச்சை செய்து, காதில் சீழ் வடிவதை நிறுத்த முடியாவிட்டாலும், நவீன முறையில், மைக்ரோ சர்ஜரி செய்து, கேட்கும் திறனைப் பெற வைக்க முடியும்.

இதுபோல் பலமுறை அறுவை சிகிச்சை செய்தும், சீழ்வடிவதை முற்றிலும் நிறுத்தலாம்.