பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

பாப்பா முதல் பாட்டி வரை

ரத்தப் பிரிவு ஏன் முக்கியம்? : கருத்தரித்தவுடன் ரத்தப் பிரிவைக் கட்டாயம் சோதனை செய்து கொள்ள வேண்டும். தாயின் ரத்தப் பிரிவு (ஆர்எச்) நெகட்டிவாக இருந்தால், கர்ப்ப காலத்தின் ஏழாவது மாதத்தில், ஒரு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவாக இருந்தால், தாயின் கருப்பையில் உள்ள எதிர் அணுக்களை அழிப்பதற்குக் குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் ஊசி போட வேண்டும். அப்படிப் போடாவிட்டால் அடுத்த கரு உருவாகும் போது அது தங்காமல் போய்விடும்.

மூன்று ஆண்டுகள் வரை : முதல் குழந்தைக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு, அடுத்த குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது தான் நல்லது. அப்போதுதான், முதல் குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதோடு, தாயும் தன் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளமுடியும்.

கருத்தரிப்பைத் தடுக்கும் முறைகள் : முதல் குழந்தை பிறந்தவுடன் மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் கருத்தரிப்பைத் தடுக்கலாம். மாத விலக்கான 5-ம் நாள் தொடங்கி, தொடர்ந்து 22 நாள்கள் மறக்காமல், மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம், கருத்தரிப்பை தடுக்கலாம்.

மாத்திரைகளைச் சாப்பிட மறந்து விடக்கூடும் என்பதால் பெரும்பாலான பெண்கள் காப்பர்-டி அணிந்து கொள்கின்றனர். ஆண்களுக்கான நிரோத் கருத்தடைச் சாதனத்தைவிட, காப்பர்-டி மிகுந்த பாதுகாப்பானது காப்பர்-டியை ஒரு முறை அணிந்துகொண்டால், மூன்று ஆண்டுகளுக்கு கவலை இல்லை.

கருத்தடை அறுவைசிகிச்சை : குழந்தைகள் வளர்ந்த பிறகு கருத்தடை அறுவை சிகிச்சையை (டியூபக்டமி) பெண்கள் செய்து கொள்வது நல்லது.