பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

133

குழந்தைப் பிறப்பைத் தடுக்க, ஆண்களும் உதவ முடியும். வாஸ்க்டமி அறுவை சிகிச்சையை ஆண்கள் செய்துகொண்டால், குழந்தைப் பிறப்பைத் தடுத்து விடலாம். விரைப் பையின் மேல்புறத்தில் மிகச் சிறிய வெட்டு ஏற்படுத்தி, வாஸ் டெபரேன்ஸ் நாளத்தின் ஒரு பகுதியைத் துண்டித்தலே, வாசக்டமி அறுவை சிகிக்சையாகும்.

அவசியம் ஏற்பட்டால், கருத்தடை செய்துகொண்ட பெண்களுக்கோ, அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண்களுக்கோ, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை பிறக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடலாம்.

மாதவிடாயிலிருந்து விடுதலை : பெண்களுக்கு 45 முதல் 47 வயதாகும்போது, மாதவிடாய் நின்று விடும். முதுமை அடைந்துவிட்டோம் என்ற உணர்வை அது ஏற்படுத்தும். அதே சமயம், மாதத் தொல்லை போச்சு என்ற விடுதலை உணர்வும் தோன்றும்.

அறிகுறிகள் : கை-கால்-இடுப்பு வலி, அதிகச் சோர்வு, உடல் உஷ்ணமாக இருத்தல், தலையிலிருந்து கால் வரை வியர்த்தல், ஆகியவை மாதவிடாய் நிற்கப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள்.

மாதவிடாய் நிற்கும் காலத்தில், குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும். சிரமமான வேலைகளைப் பெண்கள் செய்யக்கூடாது. மருத்துவரின் ஆலோசனையுடன வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டால், உற்சாகமாக இருக்கலாம். 50 வயதிலும் மாதவிடாய் நிற்காவிட்டால், மருத்துவரிடம் ஆலோசனை கலப்பது அவசியம்.