பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

135

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்கள், கருவின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான காலகட்டமாகும். கவனக்குறைவாக இருந்தால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முதல் மூன்று மாதங்களில் கருவின் கை, கால்கள், இதயம் உள்பட, முக்கிய உறுப்புகள் வளர்ச்சி அடையும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி, மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. எக்காரணம் கொண்டும், எக்ஸ்ரே எடுத்தல் கூடாது.

5-வது மாதத்தில்... : கர்ப்பத்தின் 5-வது மாதத்தில், குழந்தையின் உறுப்புகள் சரியாக உள்ளனவா என்பதை, அல்ட்ரா சவுண்ட் மூலம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. நுரையீரலுக்குள் குடல் சென்று விடுதல் (Diaphragmatic Herta) , மூளை வளா்ச்சி இன்றி, சிறிய அளவாகத் தலை இருத்தல் (Anencephaly), முதுகில் நரம்புத் தண்டு வெளிவருதல், சிறுநீரகங்கள் சரியாக வளராமை, ஆகியவற்றை, அல்ட்ரா சவுண்ட் மூலம் எளிதில் கண்டுபிடித்து விடலாம். பாதிப்பு தீவிரமாக இருந்தால், கருக்கலைக்கும் முடிவை எடுக்க வேண்டியிருக்கும். எனவே, ஐந்தாவது மாதம் தொடங்கிய, உடனேயே அல்ட்ரா பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

எடை குறைவாகக் குழந்தை பிறக்கக் காரணம்: கர்ப்ப காலத்தில் தாய்க்கு உணவுப் பற்றாக்குறை, தாய்க்குத் தேவையான ஓய்வு இல்லாமை, ரத்தச் சோகை ஆகிய மூன்று முக்கியக் காரணங்களால், எடை குறைவாகக் குழந்தை பிறக்கிறது. 3 கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால் நல்லது. எனினும் 2.5 கிலோ இருக்கலாம். ஆனால், அதற்குக் குறைவாக இருந்தால் நல்லது அல்ல. கர்ப்ப காலத்தில், தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியையே பாதிக்கும்.