பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

பாப்பா முதல் பாட்டி வரை

வைப்பது ஆகியவை மூலம், மலம் கழிக்கச் செய்வது தவறானது. இந்த முறைகள், ஆசன வாயில் புண்ணை ஏற்படுத்தி விடும். வலி அதிகமாகி மலச்சிக்கல் பிரச்சினை தீவிரமாகவும் வாய்ப்புகள் உண்டு. வயிறும் பெரிதாகி விடும்.

‘ஹிா்ஷ்ப்ரங்’நோய்: (HIRSCHSPRUNG’s DISEASE)

குடல் தசைகளை இயக்கும் நரம்பணுக்களின் (Ganglia) குறைபாட்டால் மலச்சிக்கல் ஏற்படலாம். இவ் வகைக் குறைபாடு ‘ஹிர்ஷ்ப்ரங்’ நோய் எனப்படும். பேரியம் எனிமா எனும் எக்ஸ்ரே படங்களாலும், பயாப்ஸி சோதனைகளாலும் இந் நோயை அறியமுடியும். அறுவை சிகிச்சை மூலம் நரம்பணுக்கள் இல்லாத அல்லது குறைவாக உள்ள குடல் பகுதியை நீக்கினால் மட்டுமே, இவ்வகை மலச்சிக்கல் குணமாகும். 5 ஆயிரம் குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு இந் நோய் உள்ளது.

‘பைல்ஸ்’ எனும் மூல வியாதி, குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை. ஆனால், ஆசன வாயில் ரத்தம் வெளியேறினால், பெருங்குடலிலோ, அல்லது அதன் முடிவுப் பகுதியிலோ, ஏதேனும் கட்டிகள் (Polyp Rectum) இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இது புற்றுநோய் அல்ல.

சிறுநீர் பிரச்சினை : சிறுநீரை அடக்கும் சக்தியும், நினைத்தபோது வெளியேற்றும் சக்தியும், குழந்தைகளுக்கு 3 வயதுக்குள் வந்து விடுகிறது. 3 வயது வரை குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. மூன்று வயதுக்குப் பிறகும் இரவு நேரத்தில் கட்டுப்பாடு இல்லாமல், படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழித்தால், முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை அவசியம் செய்ய வேண்டும்.