பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

157

நரம்புக் கோளாறுகள் காரணமாகச் சில குழந்தைகளுக்கு, கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். ‘மெனிங்கோசில்’ (Meningocele) என்ற முதுகுக் கட்டியால், நரம்புகள் பாதிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிப்பது கடினம். எனினும், பல அறுவை சிகிச்சைகள் மூலம், இந் நோயைக் குணப்படுத்த முடியும்.

சுய நினைவின்றி பகல் நேரத்திலேயே சிறுநீர் வடிதல், இரவு நேரங்களில் படுக்கைகளை நனைத்து விடுதல், ஆகிய குறைபாடுகள், இன்றைய நாகரிகத்தின் பயனாகப் பள்ளிக்கூடம், மற்றும் இல்லங்களில், குழந்கைளுக்கு ஏற்படும் மனச் சுமையின் வெளிப்பாடுகளாகவும், இருக்கலாம். மனவியல் நிபுணர்கள் துணையுடன், இந்த அச்சங்கள், குழந்தையின் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும். குழந்தையும் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.

சிறுநீர் பாதையில் அடைப்பு : கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் சிறுநீரகங்களும், சிறுநீர்ப் பாதையும் நன்றாக உள்ளதா என அல்ட்ரா சோனோகிராம் மூலம் சோதித்து விடலாம். சிறுநீர்ப் பாதையில் சவ்வு போன்ற அடைப்பு இருந்தால், பிறந்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சவ்வு போன்ற அடைப்பு முழுமையாக இல்லாமல் இருந்தால், பிறந்தவுடன் பிரச்சினை தீவிரமாக இருக்காது. எனினும், பிறந்த உடனேயே ‘சிஸ்டாஸ்கோப்’ என்ற மிக மெல்லிய குழாய் போன்ற லென்ஸ் பொருத்தப்பட்ட கருவி மூலம், அறுவை சிகிச்சை செய்து, அடைப்பை நீக்கி விடலாம். இந்த அறுவை சிகிச்சைக்கு அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும்.