பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




மூக்குதான் ‘வி.ஐ.பி.’

காது, மூக்கு, தொண்டையைப் பொறுத்த அளவில், குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயது வரை உள்ள பொதுவான பிரச்சனை காது, குழந்தை சரியாகத் தூங்காமல் காதைப் பிடித்து இழுத்தல், காதில் விரலை வைத்து அழுத்துதல், தூங்காமல் அழுது கொண்டே இருத்தல் ஆகியவை காதுக் கோளாறுகளின் அறிகுறிகள். முகத்துக்குப் பூசும் பவுடர், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் ஆகியவை காதில் அடைத்து நின்று, அதற்குள் நோய்த் தொற்று (infection) ஏற்படுகிறது.

பட்ஸும் வேண்டாம் : இதைத் தவிர்க்க, காதுப் பகுதிக்கு அதிகமாக பவுடர் உபயோகிக்க கூடாது. பிறந்த குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, ‘பட்ஸ்’ பயன்படுத்தி காதைச் சுத்தப்படுத்துவது, மேலும் கஷ்டத்தையே கொடுக்கிறது. காதுக்கு உள்ளே இருக்கும் அழுக்கைச் சுத்தம் செய்வதாக நினைத்து, இவற்றைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் போது, மேல்புறத்தில் உள்ள அழுக்கு, உள்ளே தள்ளப்பட்டு, பாதிப்பு ஏற்பட ஏதுவாகிறது.