பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தைப் பருவத்தில் கால்ஷியம் மாத்திரைகளைச் சாப்பிடாமல், பெரியவர்கள் ஆனவுடன் பல் சொத்தை ஏற்படும் போது கால்ஷியம் மாத்திரைகளைச் சாப்பிடுவதால், எவ்விதப் பலனும் இல்லை. ஏனெனில் வயது வரம்பைத் தாண்டிய பிறகு நிலைப் பற்கள் முளைக்கப் போவதில்லை. அதன் பிறகு, எதற்கு கால்ஷியம்?

பல் சொத்தை : சர்க்கரை கலந்த உணவுப் பொருள்கள், பற்களில் தங்கும் போது, கிருமிகளால் தாக்கப்பட்டு, பல்லிலேயே அமிலம் உண்டாகிறது. அந்த அமிலம் பற்களைச் சிதைப்பதே பல் சொத்தை. ஆரம்பத்தில் இப் பல் சொத்தை, கரும் புள்ளியாகத் தோன்றும், பின்னர் பட்டையாக மாறி, குழியாகி, பல் நரம்புகளைத் தாக்கும்போது, கன்னத்துக்குக் கை செல்லும் அளவுக்கு, வலி ஏற்படுகிறது.

சொத்தை, கரும் புள்ளியாக இருக்கும்போதே, சிகிச்சை பெறுவது நல்லது. புள்ளியை அகற்றிவிட்டு, வெள்ளி உலோக (Silver amalgam) அடைப்பு வைத்தால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

தொடக்கத்தில் அலட்சியம் காண்பித்தால், பல் சொத்தை, நரம்புகளைத் தாக்கும். சொத்தை முழுவதையும் அகற்றிவிட்டு, தாற்காலிக மருந்து வைத்து அடைத்து விடலாம். எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்த்து, நரம்புகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தால், ‘ரூட் கேனல் டிரீட்மெண்ட்’ என்ற சிகிச்சை மூலம், மருந்து அடைத்து பல்லைக் காக்க முடியும்.

ஆனால், நரம்புகளையும் தாண்டி பல் எலும்பையும் சொத்தை தாக்கி இருந்தால், வலியிலிருந்து விடுதலை பெற, பல்லைப் பிடுங்கி விடுவதுதான் நல்லது. ஆக எலும்பு வரை சொத்தையைப் போக விடாதவர்களே புத்திசாலிகள்.