பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

21

சிகிக்சை : வாய்ப்பூட்டு நோய் எதிர் மருந்து (Antetanus) எனப்படும் மருந்தை ஊசிமூலம் செலுத்தி, நோயைக் கண்டிக்க வேண்டும். வலிப்பு வராது தடுக்க, புரோமைடுகள் போன்ற மருந்துகளை ஊசி குத்த வேண்டும். இந்த நோய் வந்த குழந்தைகளை மருத்துவச் சாலையில் வைத்துச் சிகிச்சை செய்வதுதான் நலம்.

இழுப்பு : பிறந்த குழந்தைக்கும் இழுப்பு நோய் ஏற்படுவதுண்டு. நீண்ட காலம் கருப்பையில் தங்கியிருந்ததினால் ஏற்பட்ட மூச்சடைப்பு (Asphyxia), காய்ச்சல், அசீரணம், பிறவிக் கோளாறுகள் முதலியவைகளால் இது ஏற்படலாம். பார்க்க : இழுப்பு

இரத்தப் பெருக்கு (Haemorrhage) கொப்பூழ்க் கொடி பெண் உறுப்பு, குடல், தோல், முலைக்காம்பு ஆகிய உறுப்புக்களினின்றும் இரத்தப்பெருக்கு வெளிப்படக் கூடும். கொப்புழ்க் கொடியினின்று ஏற்படும் இரத்தக் கசிவு, இரண்டு வகைப்பட்டது. கொடியை நன்றாக இறுக்கிக் கட்டாததினால், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கொப்பூழிலிருந்து இரத்தம் கசிவது ஒரு வகை. இதை உடனே தடுக்க இயலும். இறுக்கமாகக் கொப்புழ்க் கொடி மீது இன்னொரு கட்டுப் போட்டுவிட்டால் இது நின்றுவிடும். கொப்பூழ்க்கொடி வாயில் காணப்படும் ரணத்தில் நச்சுக் கிருமிகள் குடிகொண்டு சீழ் கட்டிக்கொள்வதினால், கொப்பூழில் இரத்தக் கசிவு ஏற்படுவது மற்றொரு வகை. முதல் வகையைவிட, இது மிகவும் அபாயமானது, கொப்பூழ்க்கொடி பிரிந்த ஏழாவது, எட்டவாது நாள், கொப்பூழிலிருந்து இரத்தம் விரைவாகக் கசிந்து வந்தால் உடனே மருத்துவ உதவியை நாடுவது நலம். ஏனெனில், சில சமயம் இந்த இரத்தக் கசிவை, நிறுத்த கொப்பூழைச் சுற்றிலும் இறுக்கமாகப் பையைச் சுருக்குவது போல் ஒரு தையல் போடவும் வேண்டியிருக்கும்.