பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பாப்பா முதல் பாட்டி வரை

பெண் உறுப்பிலிருந்து இரத்தக் கசிவு : பிறந்த சில நாட்களுக்குப் பிறகு சில குழந்தைகளிடம் காணப்படும். தாயின் இரத்தத்தில் காணப்படும் ஈஸ்ட்டிரின் என்கிற சுரப்பு, குழந்தையின் இரத்தத்திலும் அளவுக்கு மீறி வந்து சேர்ந்து விடுவதினால், மாதவிடாயைப் போன்று கொஞ்சம் இரத்தக் கசிவு பெண் உறுப்பில் ஏற்படுகிறது. இது இரண்டு நாட்களில் தானே நின்று விடுமாதலால் தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை.

குடலில் இரத்தக் கசிவு : இது மலத்தின் வழியேதான் தெரியவரும். பிறந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு, குழந்தை கழிக்கும் மலம், கருநிறமாக காணப்படும். சில சமயம் வாந்தியிலும் இரத்தம் வெளிப்படும். இந்தக் குழந்தைகளுக்கு இத்துடன் இழுப்பும் வந்துவிடலாம். பெரும்பாலும், கிரந்திப்புண் நோய் உள்ள பெற்றோர்க்குப் பிறக்கும் குழந்தைகள்தாம் இந் நோய்க்கு உட்படுகின்றன.

சிகிக்சை : தக்க சிகிச்சை செய்யாவிடில் மரணம் உண்டாகும். ஊட்டும் உணவை நிறுத்திவிட்டு, குளுக்கோஸ் நீர் மட்டும் கொடுக்க வேண்டும். இரத்தம் அதிகம் வெளியேறியிருந்தால், பதிலுக்கு இரத்தம் ஊட்ட வேண்டும். ஆதலால், இந்தக் குழந்தைகளை மருத்துவச்சாலையில் வைத்துச்சிகிச்சை செய்வது நலம்.

தோலில் இரத்தக் கசிவு : தோலில், அங்கங்கே நீல நிறமான புள்ளிகள் போல் இரத்தக் கசிவு காணப்படும். நச்சுக் கிருமிகளால் இரத்தம் கெட்டுப்போனால், அல்லது பாரம்பரியமாக இரத்ததைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை நோயினால் தோலிலே இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அபாயகரமானதொரு நோய்.

முலைக்காம்பில் இரத்தக் கசிவு : சிலசமயம் பிறந்த குழந்தையின் முலைக் காம்புகளின்றும் கொஞ்சம் இரத்தம் வெளியே கசிவதுண்டு.